சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள ஜலகண்டாபுரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாயான பூபதி, இவரது மகன் சந்திர மௌலி (35). சிறு வயது முதலே கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சந்திர மௌலி சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எடப்பாடி புறவழிச் சாலையில் 16 கிலோமீட்டர் 140 மீட்டர் தூரத்தினை 29 நிமிடம் 10 வினாடிகளில் சந்திர மௌலி தனது காரை அங்கீகரிக்கப்பட்ட நடுவர் வழக்கறிஞர் குமார் முன்னிலையில், பின்னோக்கி ஓட்டி சாதனை நிகழ்த்திக்காட்டினர். 



ஏற்கனவே கேரள மாநிலம், பந்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த டேசன் தாமஸ் என்பவர் 30 நிமிடங்களில் 14 கிலோமீட்டர் தூரத்தினை காரில் பின்னோக்கி ஓட்டிய சாதனையை முறியடித்து சந்திரமௌளி புதிய சாதனை படைத்துள்ளார். புதிய சாதனை புரிந்த இளைஞர் சந்திர மௌலியை எடப்பாடி பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுபிடித்தனர். 



தொடர்ந்து சாதனை இளைஞர் சந்திர மௌலி செய்தியாளர்களிடம் கூறுகையில், சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தி இந்த சாதனையை நிகழ்வை மேற்கொண்டதாகவும், இளைஞர்கள் சாலைகள் மற்றும் பொதுவெளிகளில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களை கொண்டு சாகச நிகழ்ச்சியில் ஈடுபட கூடாது எனவும், கட்டாயம் அனைவரும் தலைக்கவசம் அணிந்துவிட வேண்டும் என இந்த சாதனை நிகழ்வின் மூலம் கேட்டுக் கொள்வதாக கூறினார். சாதனை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஜலகண்டாபுரம் ஓம் முருகா நண்பர்கள் குழுவினர் மற்றும் ஐயப்பா சேவா சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.