தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் பாரதிய ஜனதா கட்சி என்றால் 2014க்கு முன்புவரை இந்திமொழி பேசும் தேசியக்கட்சி என்பதுதான் அடையாளம். அதற்கு ஏற்றதுபோல அந்தக் கட்சியின் தலைவர்களும் ஒவ்வொரு தேர்தல் சமயத்தில் மட்டும்தான் தமிழ்நாட்டின் பக்கம் தலை காண்பிப்பார்கள். ஆனால் 2014-இல் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டபிறகு அந்த நிலை மாறியது. நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஸ்மிருதி, இராணி, ஜே.பி. நட்டா, உத்திரப்பிரதேச பாரதிய ஜனதா முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என பல தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத்தொடங்கினார்கள்.
தமிழ்நாட்டில் தங்களையும் தவிர்க்கமுடியாத கட்சியாக மாற்றும் முனைப்புகளை முன்னெடுத்தது அந்தக் கட்சி. அதன்படி தேசிய பட்டியல் சாதியினர் கமிஷனின் தலைவர் எல்.முருகன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடகாவின் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போலிஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக பாரதிய ஜனதாவில் இணைந்தார். கட்சியில் இணைந்த சூட்டோடு அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
சினிமாவுக்க்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் இருக்கும் வழிவழியான தொடர்பைத் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட பாரதிய ஜனதா நடிகர் குஷ்புவை ஆரவாரத்துடன் கட்சிக்குள் வரவேற்றது.குஷ்பு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். அதன் பிறகு காங்கிரஸில் இணைந்தார். அந்தக் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்தவர் கடந்த அக்டோபரில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைவதற்குச் சிலகாலம் முன்புவரை பாரதிய ஜனதா கட்சியையும் பிரதமர் நரேந்திர மோடியையும் மிகத்தீவிரமாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து வாக்குகளை இணைக்கும் முயற்சிகள் தவிர்த்து கேரளா தமிழ்நாடு என இரண்டு மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைத் தங்கள் பக்கம் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது அந்தக் கட்சி. அதன் ஒரு பகுதிதான் முருகன் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதும் என பார்க்கப்படுகிறது. திராவிடக் கட்சிகள் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக பாரதிய ஜனதாவை முன்னிலைச் சமூகத்துக்கான(Forward Castes) கட்சி, குறிப்பாக பார்ப்பனியர்களுக்கான கட்சி என்றே அடையாளப்படுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவரால் முடிந்த மட்டும் தமிழ் மக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள முயன்றிருக்கிறார். பல முக்கியத் தருணங்களைத் திருக்குறளைக் கோடிட்டுதான் தொடங்கியிருக்கிறார்.தமிழின் பழமையைப் பல இடங்களில் குறிப்பிட்டு பெருமையுடன் பேசியிருக்கிறார்.
1967ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் அதன் ஆயுதமாகக் கையிலெடுத்தது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைதான்.இன்றுவரை அந்தக் கட்சி இந்தி எதிர்ப்பு என்பதைத் தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.
ஆனால் இதெல்லாம் பாரதிய ஜனதாவின் திட்டங்களுக்குக் கைகொடுக்குமா?
உடனடியாக இல்லையென்றாலும் அவர்களின் நீண்டகாலத் திட்டத்துக்கு இது கைகொடுக்கும். ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுகவில் அவரைப் போல மக்களைக் கவர்ந்திழுக்கும் தலைமை யாருமில்லை என்பதில் பாரதிய ஜனதா தெளிவாக இருக்கிறது. அதனால் நீண்டகாலத் திட்டமாகக் கொள்கை அடிப்படையில் அதிமுகவுக்கு திமுகவின் எதிர்கட்சியாகும் எண்ணம் அந்தக் கட்சிக்கு உண்டு. தமிழ் உரிமை மற்றும் அடையாளத்தின் பாதுகாவலராகவே இதுநாள் வரை திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ளது.
1967ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் அதன் ஆயுதமாகக் கையிலெடுத்தது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைதான்.இன்றுவரை அந்தக் கட்சி இந்தி எதிர்ப்பு என்பதைத் தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.
அதே சமயம் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவின் அதிகபட்ச வெற்றி என்பது 2001 தேர்தலில் திமுக கூட்டணியில் அந்தக் கட்சி இருந்தபோது நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றதுதான். தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து 20 தொகுதிகளில் தேர்தலைச் சந்தித்தது அந்தக் கட்சி. குஜராத்தில் தொடங்கிய அந்தக் கட்சியின் சதுரங்க வேட்டை, ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப்பிரதேசம், வடகிழக்கு எல்லைகள், கர்நாடகா என இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலுமே விரிந்தது. எல்லை மாநிலங்களான கேரளாவும் தமிழ்நாடும் இந்த வேட்டையின் கடைசிக்கட்டம். இதில் அந்தக் கட்சி வேட்டையாடுமா? அல்லது வேட்டையாடப்படுமா? என்பது வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் தெரியவரும்.