திமுக தலைமையை மீறி மறைமுகத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் யார் என்ற தகவலைப் பார்க்கலாம்.


நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. பெரும்பாலான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியிருந்தது. வெற்றிபெற்ற அனைவரும் மார்ச் 2-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். 


அதில் மாநகராட்சி மேயர் பொறுப்புகள் அனைத்தையும் திமுக எடுத்துக்கொண்டதோடு, துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தது. இதையடுத்து, மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர்,  நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. 


இன்று காலை தேர்தல் ஆரம்பித்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால், திமுக கூட்டணிக் கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


கரூர் புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி திமுக தலைமை அறிவித்திருந்தது. புலியூர் பேரூராட்சித் தலைவர் வேட்பாளராக க.கலாராணி என்பவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தார். இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், கலாராணி மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், திமுகவினர் அவரது பெயரை முன்மொழியாமல் திமுகவைச் சேர்ந்த 3ஆவது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியைத் தலைவராக முன்மொழிந்தனர். இதனால், கலாராணி தோல்வியடைந்தார்.


கோவை கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்தக் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக சூலூர் ஒன்றியப் பொறுப்பாளர் மனோகரன் 22 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.


கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் திமுக ஒதுக்கியிருந்தது. ஆனால் இன்று திமுகவினர் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்து தலைவராக அறிவித்துக் கொண்டனர். 


நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதையடுத்து நகராட்சித் தலைவர் வேட்பாளராக கிரிஜா திருமாறன் என்பவரை அறிவித்தது வி.சி.க. ஆனால் திமுக வேட்பாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணனும் நகராட்சித் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். இதில், 23 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். கிரிஜா திருமாறன் 3 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.


தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியின் தலைவர் பதவியை வி.சி.கவுக்கு ஒதுக்கீடு செய்து திமுக அறிவித்தது. இந்தப் பதவிக்கு சின்னவேடி என்பவரை வேட்பாளராக வி.சி.க அறிவித்தது. ஆனால் இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது இவருக்கு எதிராக 13வது வார்டில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் சாந்தி புஷ்பராஜ் என்பவர் மனுதாக்கல் செய்தார். சின்னவேடி 7 வாக்குகள் பெற்ற நிலையில், சாந்தி புஷ்பராஜ் அவரை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.


தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த நகராட்சியை, காங்கிரசுக்கு ஒதுக்கி திமுக அறிவித்திருந்தது. நகராட்சித் தலைவர் வேட்பாளராக சற்குணம் என்பவரை காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், தேர்தல் நாளான இன்று அவருக்கு எதிராக 10வது வார்டில் வெற்றிபெற்ற திமுகவைச் சேர்ந்த ரேணுப்பிரியா மனுதாக்கல் செய்தார். இதனால், சற்குணம் தேர்தலைப் புறக்கணிக்க ரேணுப்பிரியா வெற்றிபெற்றார்.


ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சித் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் பேரூராட்சித் தலைவர் அருள்ராஜின் மனைவி செல்வமேரி அருள்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தல் நாளான இன்று, ஸ்ரீபெரும்புதூர் நகர திமுக செயலாளர் சதீஷ் குமாரின் மனைவி சாந்தி சதீஷ் குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். மொத்தம் 11 வாக்குகள் பெற்று சாந்தி சதீஷ்குமார் வெற்றி பெற, 4 வாக்குகள் மட்டுமே பெற்று செல்வமேரி அருள்ராஜ் தோல்வியடைந்தார்.


திமுகவினரின் இதுபோன்ற செயல்களால் அதிர்ச்சியடைந்த வி,சி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவினர் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்துத் கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ’’முதலமைச்சரின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.


கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு சிலவற்றில் திமுகவினர் போட்டியிட்டு வென்றது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 


பின்பு திமுக தலைவருமான முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டும்'' எனத் திமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.