தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவில் வருகிறது. இந்த நிலையில் முதற்கட்ட திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.



திமுக சேலம் வேட்பாளர்:


சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், 1991 ஆண்டு அதிமுக சார்பில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக செயல்பட்டார். 1999- 2004 காலகட்டத்தில் சேலம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 இல் திமுகவில் தம்மை இணைத்துக் கொண்டார். அதன்பின்னர், மாநில தேர்தல் பணி குழு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் பணியாற்றினார். 2010-2014 ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 2021 இல் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக அறிவிக்கப்பட்டு தற்போது வரை பணியாற்றி வருகிறார்.



சேலத்தில் திமுக:


மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த மாவட்டமான சேலத்தில் வீரபாண்டியார் இருந்தவரை சேலம் மாவட்டம் திமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் திமுக ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளை வென்றது. எனவே சேலம் மாவட்டத்தை மீண்டும் திமுக கோட்டையாக மாற்ற வேண்டும் என்பதற்காக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை சேலத்தின் பொறுப்பு அமைச்சராக நியமித்து திமுக செயல்பட்டு வருகிறது. கே.என்.நேருவின் வருகைக்குப் பின்னர் சேலம் மாவட்டம் அவரது கட்டுப்பாட்டிற்குள் வைத்து செயல்பட்டு வருகிறார். அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சேலத்தில் திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றது. 


கே.என்.நேரு சாய்ஸ்:


குறிப்பாக சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இளைஞர் அணி மாநாட்டின் போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என மேடையில் கோரிக்கை வைத்தார். இருப்பினும், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் சாய்ஸ் எப்போதுமே டி.எம்.செல்வகணபதியை நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூறி வந்ததாக திமுகவினர் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் திமுக வேட்பாளராக டி.எம்.செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.