6 முறை எம்.பியாக இருந்த, தஞ்சை மாவட்டத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் புதிய முகமான முரசொலி என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் இதே மாதிரி யாருமே எதிர்பாரத வகையில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பரசுராமன் என்பவரை அதிமுக வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. அவர் பலம் வாய்ந்த திமுக வேட்பாளரான டி.ஆர்.பாலுவையே தோற்கடித்து எம்.பியானார் என்பது வரலாறு.


எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாய்ப்பு இல்லை


அதே மாதிரி இப்போது முரசொலி என்பவருக்கு வாய்ப்பை வழங்கியிருக்கிறது திமுக. தஞ்சாவூரில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் போட்டியிடவில்லையென்றால், தஞ்சை மாநகராட்சி துணை மேயராக இருக்கும் அஞ்சுகம் பூபதிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு முரசொலிக்கு வாய்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


தஞ்சை தொகுதியை திரும்பி பார்க்க வைத்திருக்கும் முரசொலி


இந்த முறை 11 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும். தஞ்சை தொகுதி வேட்பாளர் யார் என எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஏனென்றால், தஞ்சையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாய்ப்பு கொடுக்காமல், 2014ல் டி.ஆர்.பாலுவிற்கு திமுக தலைமை வாய்ப்பு கொடுத்தது. வழக்கமாக ஸ்ரீபெரம்பதூர் தொகுதியில் போட்டியிடுபவர் அந்த தேர்தலில் தஞ்சை தொகுதியை கேட்டு வாங்கிச் சென்று போட்டியிட்டார். ஆனால், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவருக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, அவரது ஆதரவாளர்கள் டி.ஆர்.பாலுவிற்கு சரியாக தேர்தல் பணி ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அந்த தேர்தலில் டி.ஆர்.பாலு சொந்த மண்ணிலேயே தோல்வி அடைந்தார். அதனால்தான், 2019ல் அவர் தஞ்சையில் போட்டியிடாமல் மீண்டும் ஸ்ரீபெரம்பதூர் தொகுதிக்கே வந்து நின்று வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் மீண்டும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கே திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. தஞ்சையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை தாண்டி எவரும் வெற்றி பெற்று விட முடியாது என்ற பிம்பம் அங்கு கட்டமைக்கப்பட்டிருந்தது. 


பழனிமாணிக்கத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் ?


ஆனால், இந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக சொல்லப்படுவது அவருக்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்றும் 6 முறை ஒரே தொகுதியில் எம்.பியாக நின்றுவிட்ட ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கினால், அந்த மாவட்டத்தில் பணியாற்றும் புதியவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள் என்பதைதான். அதோடு, இளைஞரான புது முகத்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பழனிமாணிக்கத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.


முரசொலிக்கு இரண்டு முறை அறிமுகம் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்


தஞ்சை தொகுதியில் புதிய முகமாக களமிறங்கவுள்ள முரசொலிக்கு மட்டும்தான் வேட்பாளர் அறிவிப்பின்போது முதல்வர் இரண்டு முறை இண்ட்ரோ கொடுத்தார். தஞ்சை முரசொலி என்று சொல்லிவிட்டு, முரசொலியே அங்கே நிற்கிறது என்றார். அப்படி முதல்வர் இரண்டு முரை இண்ட்ரோ கொடுத்துள்ள தஞ்சையின் திமுக வேட்பாளர் முரசொலி திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர். அந்த பகுதியில் செல்வாக்காக விளங்கிய எஸ்.கந்தசாமி நாட்டார் என்பவரது பேரன் தான் இந்த முரசொலி. கந்தசாமி நாட்டார் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநராக இருந்தவர்.




ஒன்றிய செயலாளருக்கு வாய்ப்பு கொடுத்த திமுக


பி.எஸ்.சி. பி.எல். படித்துள்ள முரசொலியின் தந்தை ஊராட்சி மன்ற தலைவராகவும், தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்க தலைவராகவும் பணியாற்றியவர், முரசொலி 2004 முதல் தென்னங்குடி ஊராட்சி பிரதிநிதியாகவும், 2006 – 2011 ஆண்டுகளில் தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 2014 - 2020 வரை தி.மு.க பொதுக்குழு உறுப்பினராகவும், 2020  தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு. 2022 ல் நடைபெற்ற தி.மு.க வின் 15 வது அமைப்பு தேர்தலில் தஞ்சை வடக்கு ஒன்றிய கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தஞ்சையை பொறுத்தவரை செல்வாக்கான, மக்கள் மத்தியில் மிகுந்த பரிட்சியமான மனிதர்களுக்கே இதுவரை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், திருவையாறுக்கு அருகே இருக்கும் தென்ங்குடி என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு ஒன்றிய செயலாளருக்கு தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது திமுக தலைமை.