காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024  (Kanchipuram Lok Sabha Constituency 2024 )


காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் (Kancheepuram Lok Sabha constituency) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது.  அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனை அடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) , செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.


க. செல்வம்


தந்தை பெயர் : வெ.கணேசன்


பிறந்த தேதி : 18-06-1974


முகவரி :  148 , மாரியம்மன் கோயில் தெரு, சிறுவேடல் கிராமம் ,காஞ்சிபுரம் தாலுகா.


மனைவி பெயர் : லக்ஷ்மிகா.


தேர்தல்  :


2014 காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் வெற்றி வாய்ப்பு இழப்பு


2019 நாடாளுமன்ற வேட்பாளர் வெற்றி காஞ்சிபுரம் நாடாளுமன்ற  உறுப்பினர்.


இவரது தந்தை திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். அவர் கட்சியில் ஒன்றிய துணைப் பொறுப்புகளில் பொறுப்புகள் வகித்து. பின்னர் மாவட்ட பிரதிநிதியாக இருந்தவர். அவரை தொடர்ந்து  செல்வம்.1989 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகவும், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட அமைப்பாளராகவும் , ஒன்றிய செயலாளராகவும் தற்போது மாவட்ட துணை செயலாளராகவும் கட்சி பணியாற்றி வருகிறார். 


செல்வத்தின் செல்வாக்கு என்ன ?


காஞ்சிபுரம் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் செல்வம் மீது  திமுக கட்சியினர் மத்தியில் பெரிய அதிருப்தி கிடையாது.  தொடர்ந்து 5  ஆண்டு காலம் மக்களவை உறுப்பினராக இருந்தாலும்,    கட்சியை சேர்ந்த எந்த நிர்வாகி தங்களுடைய வீட்டு    விழாக்களுக்கு அழைத்தால் தவறாமல் ஆஜர் ஆகிவிடுவார் செல்வம். நிர்வாகிகள், மக்கள் என யார் அலுவலகத்துக்கு வந்தாலும் சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டிருப்பதால், பெரிய அளவில் திமுகவினர் மத்தியில் அதிருப்தி கிடையாது. குறிப்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர்  அமைச்சர் அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்   சுந்தர்  எம்.எல்.ஏ  ஆகியோரின் ஆதரவு முழுமையாக இருப்பதால்,  கட்சிப் பணி செய்ய  பிரச்சனை கிடையாது.  கூட்டணி கட்சியினர் இடையே  கடந்த 5 ஆண்டுகளாக  நட்பு பாராட்டி வந்ததால், கூட்டணி கட்சியினர் மத்தியிலும்    செல்வத்திற்கு நல்ல பெயர் உள்ளது.   இதை வைத்து  இந்த தேர்தலிலும்  மீண்டும்  சூரியனை உதயமாக்கிவிடலாம் என்று நம்பிக்கையில் தேர்தல் பணியை துவங்கியுள்ளார்.


2019 தேர்தல் நிலவரம் எப்படி ?


கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர்  வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான,  மரகதம்  என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


2014 தேர்தல் நிலவரம்


அதிமுக வேட்பாளர் மரகத குமரவேல் 4,99,395 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஜி. செல்வம் 3,52,529 வாக்குகளை பெற்றார். மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா 2,07,080 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். 


யாருடைய கோட்டை ?


செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2  முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில்  காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.