காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024  (Kanchipuram Lok Sabha Constituency 2024 )


காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது.  அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனை அடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) , செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.


அதிமுக வேட்பாளர் பட்டியல் 


வரும் 22ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், இன்று திமுக வெளியிடும் முன் அவசர அவசரமாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கீட்டையும் அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மக்களவை தேர்தல் 2024ல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன் அடிப்படையில், 16 தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார். மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தால் 5 தொகுதிகள் வழங்குவோம் என்றும், கூட்டணியை நம்பி அதிமுக கட்சி இல்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் E இராஜசேகர்


அதிமுக துணை அமைப்பாளர் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். அதிமுகவில் 47 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறார் பெரும்பாக்கம் ராஜசேகர். செங்கல்பட்டு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அதிமுகவில் மிக முக்கிய நபர்களின் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.


பெரும்பாக்கம் பகுதியில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக, இவருடைய தந்தை, இவர் மற்றும் இவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் உள்ளே தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகின்றனர். பெரும்பாக்கம் பகுதியில், சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற 12 வார்டுகளையும் இவரது ஆதரவாளர்களே கைப்பற்றினர். அமைச்சர் மா. சுப்பிரமணியன் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும், இவரது ஆதரவு அதிமுக வேட்பாளரை ஒன்றிய கவுன்சிலர் ஆகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 



கிளைச் செயலாளர் துவங்கி நாடாளுமன்ற வேட்பாளர் வரை


தனது ஆரம்ப காலத்தில் கட்சியில் கிளைச் செயலாளராக பணியை துவங்கியவர். மாவட்ட பிரதிநிதி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர், மாவட்ட மாணவர் அணி செயலாளர், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆகிய பதிவுகளை வகித்து வந்துள்ளார். 47 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அதிமுகவில் பயணித்து வருகிறார்.



அதிமுகவினர் நம்பிக்கை


அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் வெளியூர் வேட்பாளராக இருந்தாலும், காஞ்சிபுரத்தில் களம் இறங்கி இருப்பது, சாதகமாகவே பார்க்கின்றனர். உள்ளூர் வேட்பாளர்கள் சிலர் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தாலும், தலைமை எதிர்பார்க்கும் தொகையை செலவு செய்ய முடியாததால் போட்டியிலிருந்து விலகினர். இதனால் அதிமுகவின் முக்கிய மாவட்ட செயலாளர்கள் , ராஜசேகரை ஆதரிக்கும் சூழல் ஏற்பட்டது. பணமும் செலவு செய்யக்கூடிய மற்றும் அனுபவம் நிறைந்த வேட்பாளர் என்பதால், காஞ்சிபுரம் தொகுதியை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறது அதிமுக.


2019 தேர்தல் நிலவரம் எப்படி ?


கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர்  வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான,  மரகதம்  என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


2014 தேர்தல் நிலவரம்


அதிமுக வேட்பாளர் மரகத குமரவேல் 4,99,395 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஜி. செல்வம் 3,52,529 வாக்குகளை பெற்றார். மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா 2,07,080 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். 


யாருடைய கோட்டை ?


செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2  முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில்  காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.