DMK Lok Sabha Election Manifesto 2024: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை வெலியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை ரூ.75க்கும் டீசல் விலை ரூ.65 க்கும், சிலிண்டர் விலை ரூ.500க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தி.மு.க. தேர்தல் அறிக்கை:


நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகிறது.


நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில், திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், தொழிற்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, அரசு தலைமை கொறடா & வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் இன்று காலை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


நீட் தேர்வு ரத்து, வட்டியில்லா கடன்:


இந்த தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு தொடர்பான அறிவிப்புகள் பல இடம்பெற்றிருந்தது. இதில் முக்கியமாக ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம், இசுலாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும், சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும், நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கை ரத்து ஆகியவை முக்கியமாக பார்க்கப்படுகிறது.


சிலிண்டர் விலை குறைப்பு:


இந்த அறிவுப்புகளில் மக்களை ஈர்க்கும் வகையில் மக்களுக்கு பயன்படும் வகையிலும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75 க்கும், டீசல் ரூ.65 க்கும், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் ரூ. 500 க்கும் விற்பனை  செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ. 1000 கடந்து விற்பனையானது, பின் மத்திய அரசு 100 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.918 க்கு விற்பனை செய்யப்பட்டது.


தேர்தல் நெருங்கும் நிலையில் சர்வதேச மகளிர் தினத்தன்று மேலும் 100 ரூபாய் குறைத்து பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் தற்போதைய சிலிண்டர் விலை ரூ.818 ஆக உள்ளது. இந்நிலையில் இன்று வெளியான திமுக தேர்தல் அறிக்கையில், சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு ரூ.500 க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.