கடந்த செவ்வாய்கிழமை வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள், சிலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக அமைந்திருக்கின்றன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது.


ஆனால், பாஜகவுக்கு தற்போது தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, இந்தியா கூட்டணி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், 235 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.


செல்வாக்கை மீட்டெடுத்த காங்கிரஸ்: காங்கிரஸ் மட்டும் 99 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதோடு, மகாராஷ்டிரா மாநிலம் சங்லி தொகுதி சுயேச்சை எம்.பி. விஷால் பாட்டில், தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ளார். இதனால், அதன் பலம் 100ஐ எட்டியுள்ளது.


இந்தியா கூட்டணியின் பலம் கூடுவதற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெற்ற வெற்றியே காரணம். குறிப்பாக, பல மாநிலங்களில் இழந்த செல்வாக்கை காங்கிரஸ் மீட்டெடுத்ததே காரணம்.


வடக்கில் ஒரு தொகுதி, தெற்கில் ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டது இந்த முறை அக்கட்சிக்கு கை கொடுத்துள்ளது. வயநாடு, ரேபரேலி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டையும் கைப்பற்றியுள்ளார்.


வயநாடா? ரேபரேலியா? ஆனால், அரசியலமைப்பின்படி ஒருவரால் இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் எம்.பி.யாக இருக்க முடியாது. எனவே, ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை அவர் ராஜினாமா வேண்டி உள்ளது. எந்த தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளார் என்பதுதான் தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பலத்த தோல்வியை சந்திக்கும்போது கேரளா மாநிலம்தான் காங்கிரஸ் கட்சியை காப்பாற்றியது. அந்த தேர்தலில், உத்தர பிரதேசம் மாநிலம் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானியிடம்  தோல்வியை தழுவினார்.


அந்த இக்கட்டான சூழலில் வயநாடு தொகுதிதான் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது. எனவே, கேரளா மாநிலம் குறிப்பாக வயநாடு தொகுதியுடன் உணர்வுபூர்வமான பிணைப்பை ராகுல் காந்தி கொண்டிருக்கிறார் என தெரிகிறது.


எனவேதான், தொடர்ந்து இரண்டாவது முறையாக வயநாட்டில் களமிறங்கினார். அதேபோல, இந்த தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு விருப்பம் இல்லை என்றபோதிலும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் அவர் ரேபரேலியில் போட்டியிட்டதாகக் கூறப்படுகிறது.


இந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. வயநாடு தொகுதியின் மீது உணர்வுப்பூர்வமான பிணைப்பு இருந்தாலும், அரசியல் ரீதியாக பார்த்தால் ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியையே ராகுல் காந்தி தக்க வைப்பார் என கூறப்படுகிறது.