நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. கடந்த 1ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு பல்வேறு முன்னணி ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வௌியிட்டது.


இந்தியா கூட்டணி - பா.ஜ.க. போட்டா போட்டி:


பெரும்பாலான கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்திருந்தன. குறிப்பாக, நாட்டின் முன்னணி தனியார் ஊடகத்துடன் ஆக்ஸிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 400க்கும் மேற்பட்ட அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தது.


ஆனால், காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக அமைந்து வருகிறது. 5 மணி வரை நிலவரப்படி, பா.ஜ.க. கூட்டணி 295 இடங்களில் முன்னணயில் உள்ளது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னணயில் உள்ளது. 17 தொகுதிகளில் பிற கட்சிகள் உள்ளனர்.


சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் மற்றும் மற்ற பிற கட்சிகள் ஆதரவு அளித்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதனால், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பு பொய்யாகியுள்ளது. குறிப்பாக, 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற கணிப்பு பொய்யாகியுள்ளது.


கண்ணீர்விட்ட பிரதீப் குப்தா: 


இந்த சூழலில், தனியார் தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகள் குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பை வெளியிட்ட பிரதீப் குப்தாவும் பங்கேற்றார். அவரிடம் அவரது கருத்துக்கணிப்பு பொய்யானது குறித்து கேட்கப்பட்டது.






அப்போது, தனது கருத்துக்கணிப்பு பொய்யானதை எண்ணி மன வேதனை அடைந்த பிரதீப் குப்தா நேரலையிலே கண்ணீர் விட்டார். அப்போது, நெறியாளர் உள்பட அருகில் இருந்த சக பத்திரிகையாளர்கள் அவரை தேற்றினர்.


பொய்யான கருத்துக்கணிப்பு:


தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் பா.ஜ.க. கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்றே வெளியானது. குறிப்பாக, சில கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க. மட்டும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று கூறியது. ஆனால், அனைத்து கருத்துக்கணிப்புகளும் பொய்யானதால் இந்தியா கூட்டணி கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.