Tamil Nadu Lok Sabha Election Results 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த ஏப்.19ஆம் தேதி தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி தேர்தல் களத்தில் நிலவியது.


வெற்றிக் கொண்டாட்டத்தில் அறிவாலயம்


இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  பாஜக ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது.


தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன், வினோஜ் பி.செல்வம், எல். முருகன், பால் கனகராஜ், கருப்பு முருகானந்தம், ராதிகா என அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். 


தொண்டர்களை சந்திக்கும் முதலமைச்சர்


இந்நிலையில், முன்னதாக திருநெல்வேலியில் பேட்டியளித்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், இதுவரை வெளியான முடிவில் திமுகவின் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலையில் உள்ளார். இனி முடிவுகள் மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது பொதுமக்கள் போட்ட ஓட்டு முடிவு எதுவாக இருந்தாலும் அதை வரவேற்கிறேன். மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்’’ எனப் பேசியுள்ளார்.


மற்றொருபுறம் திமுகவின் கனிமொழி தொடர்ந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அவரது வெற்றி உறுதியாகியுள்ளது.






தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சந்திக்க உள்ளார் என்னும் தகவல் வெளியாகியுள்ளது