கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தொகுதியில் வேட்பாளர்கள் இருவருடைய புகைப்படம் ஒரே மாதிரியாக இருப்பது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்
மே மாதம் 10-ஆம் தேதி, கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், வரும் 13-ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
இந்நிலையில், வேட்பாளர்கள் தீவிரமான பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
ராய்சூர் தொகுதியில் குழப்பம்
ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா பட்டீல் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் பசவனகவுடா துர்விகால் போட்டியிடுகிறார். ஈஷப்பா என்பவர் சுயேச்சை வேட்பாளர். அவர் தனது பெயரை ஈஷப்பா கவுடா பட்டீல் என மாற்றியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், பிரதாப் கவுடா பட்டீல் போன்ற தோற்றத்தில் நெற்றியில் திருநீறுடன் அவரை போல் முகத் தோற்றத்தை கொண்டவராக இருக்கிறார். இதனால், அங்கு வேட்பாளர்கள் யார் எந்த கட்சி என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பெண் வேட்பாளர்கள்:
இதில், 185 வேட்பாளர்கள் மட்டுமே பெண்கள் ஆவர். கர்நாடகாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தன்னுடைய வேட்பாளர்களை பாஜக களத்தில் இறக்கியுள்ள நிலையில், 223 தொகுதிகளில் காங்கிரஸ் களம் கண்டுள்ளது. அதேபோல, மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 207 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மொத்தம் 918 சுயேட்சைகளும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 685 பேரும் களத்தில் உள்ளனர்.
கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில், 2,655 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 2013 தேர்தலில் 2,948 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 2018இல் 219-ஆக இருந்த பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை இம்முறை 185 ஆக குறைந்துள்ளது. 2013ல் 170 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
வேட்பாளர்கள்:
2018 சட்டப்பேரவை தேர்தலில் 2,436 ஆக இருந்த ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் இந்த முறை 2,427-ஆக குறைந்துள்ளது. 2018-இல் 583-ஆக இருந்த வேட்பு மனுவை திரும்பப் பெற்றோரின் எண்ணிக்கையும் இம்முறை 517 ஆக குறைந்துள்ளது.
பல்லாரி நகரத் தொகுதியில் அதிகபட்சமாக 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக, ஹோஸ்கோட் மற்றும் ஆனேகல் தொகுதிகளில் தலா 23 பேர் போட்டியிடுகின்றனர். மங்களூரு, பண்ட்வால், தீர்த்தஹள்ளி, குந்தாப்பூர், காபு, யெம்கனமர்டி மற்றும் தியோதுர்க் ஆகிய 7 தொகுதிகளில் குறைந்தபட்சமாக 7 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.
28 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மாநிலத் தலைநகரான பெங்களூருவில் 38 பெண்கள் உட்பட 389 பேர் போட்டியிடுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் (ஆறு) ராஜராஜேஸ்வரிநகர், ஜெயநகர் மற்றும் கேஜிஎஃப் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். நிப்பானி, ஹரப்பனஹள்ளி, மாலூர், சிக்பெட் ஆகிய இடங்களில் தலா ஐந்து பெண் வேட்பாளர்கள் உள்ளனர்.
பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட 36 தொகுதிகள், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகள் உள்பட 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.