தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிப்ரவரி 19 ஆம் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பிரச்சாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.  இதனையொட்டி தேர்தல் களம் காணும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காலை, மாலை என இருவேளைகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். 






அந்த வகையில் மதுரை 42- வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் 65 வயதான மூதாட்டி சுசிலாவுக்கு ஆதரவாக  அவரது 5 வயது மற்றும் 7 வயது பேத்தி மற்றும் குடும்பத்தினர் பங்கஜம் காலனி பகுதியில் வாக்குகள் சேகரித்தனர். அவரது சின்னமான நாற்காலியை ஆட்டோவில் பிளாஸ்டிக் நாற்காலி கட்டி கையிலும் சின்ன சின்னபிளாஸ்டிக் நாற்காலிகளை தூக்கிக் கொண்டு பிரச்சாரம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.



 


 

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் சுசிலா கூறுகையில் ‘’100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் 42 ஆவது வார்டு நம்முடையது. இதே பகுதியில் இருந்து வரும் எனக்கு வார்டு மக்களின் சிரமங்கள் நன்றாக தெரியும். அவர்களுக்கு என்ன தேவை என்பது ஒரு வாக்காளராக உணர்ந்திருக்கேன். அதனை கண்டிப்பாக செய்து கொடுப்பேன். கண்டிப்பாக என்னை நம்பி வாக்களியுங்கள். தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். எனக்காக வாக்கு சேகரிகரிக்க என் பேத்திகளும் வந்துள்ளது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாற்காலி சின்னம் தான் நம்முடைய சின்னம். வரும் 19 ஆம் தேதி மறக்காமல் நாற்காலி சின்னத்தில் வாக்களியுங்கள்” என கேட்டுக்கொண்டார்.