வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நாளை தொடங்கி நான்கு நாட்கள் சென்னையில்  நடைப்பெறவுள்ளது. 


வாக்களார் பட்டியல் திருத்தம்: 


சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கான வரைவு வாக்களார் பட்டியல் கடந்த அக்டோபர் 29 தேதி அன்று வெளியிடப்பட்டது. 


இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டலங்களான 4,5,6,8,9,10,13 மற்றும் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொது மக்கள் தங்கள் குடும்பத்தினரின் பெயர் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை இந்த முகாமில் சரிப்பார்த்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 


சிறப்பு முகாம்:


இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக நாளை ( 16.11.2024), ஞாயிற்றுக்கிழமை (17.11.2024) மற்றும் வரும் நவம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்டத்தில் உள்ள் 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 


மேலும் வாக்காளர் பட்டியலில்  18 வயது நிரம்பியும் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் ( 01.01.2007 தேதி முன் பிறந்திருக்க வேண்டும்) படிவம் 6(Form-6)மூலம் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். 


பெயர் நீக்கம் மற்றும் தங்கள் தொகுதிக்குள்ளயே ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிப்பெயர்ந்தவர்கள் மற்றும் வேறு சட்டமன்ற தொகுதிக்கு குடிப்பெயர்ந்து புது இருப்பிடத்தில் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய அதற்கான உரிய படிவத்தை பூர்த்தி செய்து அந்த இருப்பிடத்திற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதையும் படிங்க: TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!


இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: 


இந்த சிறப்பு முகாம் மட்டுமில்லாமல், சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல அலுவலங்களில் உள்ள அலுவரின் அலுவலகத்தில் வரும் நவம்பர் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் https://voters.eci.gov.in/ என்கிற இணையத்தளம் மூலமும் தங்களது பெயர்கள் சேர்த்தல், மாற்றம், நீக்குதல் போன்றவற்றை ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளாலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.