விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 4,74,230 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார்.


நடந்து முடிந்த 18ஆவது மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத் தேர்தலில் ஏப். 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று அதாவது ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. 


இந்த 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாகவும் கவனமாகவும் செய்து வருகின்றது. இந்நிலையில் இந்தத் தொகுப்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்தும், விழுப்புரம் மக்களவைத் தொகுதி கள நிலவரம் எப்படி இருந்தது என்பது குறித்தும் காணலாம். 


விழுப்புரம் மக்களவைத் தொகுதி


90 விழுக்காடு விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழிலாக பிரதானமாகக் கொண்ட விழுப்புரம் தொகுதி, கல்வராயன் மலைத் தொடர், செஞ்சி கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கொண்டிருப்பதுடன், சென்னை மற்றும் தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை, முக்கிய ஆறுகள் பாயும் தொகுதி என பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் உருவாக்கப்பட்ட விழுப்புரம் மக்களவைத் தொகுதி, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும்.


விழுப்புரம் தொகுதியைப் பொறுத்தவரையில், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுகவும், இரண்டு தொகுதிகளில் அதிமுகவும் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளனர்.


வாக்காளர்கள் விவரம் 2024:


விழுப்புரம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் - 7.40.412 பேர்


பெண் வாக்காளர்கள் - 7,53,638 பேர்


மூன்றாம் பாலினத்தவர் - 209 பேர்


இவர்களில் நடந்து முடிந்த 2024 வேலூர் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தவர்கள் மொத்தம் 11,50,164 பேர். அதாவது 76.52 விழுக்காடாகும். 


வேட்பாளர் விவரம்


விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியில் இடம்பெற்ற விசிக சார்பில் போட்டியிட்டு ரவிக்குமார் வெற்றிபெற்றார்.  கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் இந்த முறை விசிகவின் பானை சின்னத்திலேயே போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் ஜெ.பாக்யராஜ், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் முரளி சங்கர், நாதக சார்பில் மு. களஞ்சியம் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். 


தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் கடந்த முறை திமுக கூட்டணி மற்றும் அதற்கு முந்தைய 2 முறைய அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலைப் போல் விசிகவின் கை இந்தமுறையும் ஓங்கியுள்ளதாகவும், விசிக - அதிமுக - பாமக இடையே மும்முனைப் போட்டி என மறுபுறமும் கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தைப் பார்க்கலாம்.