விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காண பாமக வேட்பாளர் அன்புமணி இட ஒதுக்கீட்டு போராளிகளில் நினைவு தூனுக்கு அஞ்சலி செலுத்தி தேர்தல் பணியை தொடங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் பிடாகத்தை அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் நா.புகழேந்தி. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இதையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்புமனு தாக்கல்
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14 தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 26ம் தேதி கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, வட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்.
தேர்தல் பணியை தொடங்கிய பாமக
அடுத்த மாதம் 10ஆம் தேதி வாக்குப்பதிவும், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் கூட்டுரோட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு போராளிகள் நினைவுத்து தூணுக்கு கட்சியினருடன் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்திய வேட்பாளர் அன்புமணி தேர்தல் பணியை தொடங்கினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்து உள்ள நிலையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.