விழுப்புரம் மாவட்டம் பிடாகத்தை அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் நா.புகழேந்தி. விக்ரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. விக்ரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.


வேட்புமனு தாக்கல் 


இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் ஜூன் 14 தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24-ஆம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 26-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூலை 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம்


பாமக போட்டியிடுவது குறித்த நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளரவ தலைவர் ஜி.கே.மணி, மாநில நிர்வாகிகளான வடிவேல் ராவணன், தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கைச்சூர் ஆறுமுகம், பாமக முன்னாள் பொதுச்செயலாளர் தீரன், மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா அருள்மொழி, பாமக முன்னாள் எம் பி மருத்துவர் செந்தில், பாமக வழக்கறிஞர் பாலு, மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்துவது தொடர்பான கருத்துக்களை தெரிவித்தனர்.


திமுக, நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு


இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதேபோல  நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்தார்.


இடைதேர்தலில் பாமக போட்டி


தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.  இந்த நிலையில் பாமக சார்பில் சி. அன்புமணி  போட்டியிடுவார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.  2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட சி. அன்புமணி மீண்டும் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவார்.


விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸை தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாமக வேட்பாளர் சி.அன்புமணி ஆரம்பகால முதல் இன்று வரை 1981 முதல் 2024 வரை


1982 வன்னியர் சங்க கிளை செயலாளர்


1986 வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர்


1992 வன்னிய சங்க மாவட்ட தலைவர், பா.ம.க. மாவட்ட துணை செயலாளர்


2001 ஒன்றிய கவுன்சிலர் (முண்டியம்பாக்கம்)


2000 Το 2024 வன்னியர் சங்க மாநில துணை தலைவர்


2016 விக்கிரவாண்டி சட்டமன்ற வேட்பாளர்


2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அன்புமணி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் 2016ல் தனித்து களம்கண்ட பொழுது அன்புமணி சுமார் 41,428 வாக்குகளை பெற்றார்.


பதிவான வாக்குகளில் இது 23.29 சதவீதமாகும். எனவே பெருவாரியான வாக்குகளை அன்புமணி பெற்றதால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


வன்னியர் வாக்குகள் யாருக்கு ?


திமுக சார்பில் முதல்முறையாக போட்டியிடும் அன்னியூர் சிவா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர், மேலும் இவருக்கு அணைத்து கட்சி நிர்வாகிகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இந்த நிலையில் பாமக சார்பில் பனையபுரம் பகுதியை சேர்ந்த அன்புமணியை அக்கட்சி அறிவித்துள்ள நிலையில் வன்னியர் வாக்குகளை பெறுவதில் முக்கியத்துவம் காண்பித்து வருகிறது. இவ்வாறு நடக்கும் சுழலில் அதிமுக சார்பில் தற்போது வரை வேட்பாளர் அறிவிக்காமல் உள்ளனர்.