செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி 17வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தண்ணீர் குழாய் சின்னத்தில் ராதிகா பார்த்தசாரதி என்பவர் போட்டியிடுகிறார். முதன்முறையாக நகர்மன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் விஜயின் கொடி மற்றும் நடிகர் விஜயின் புகைப்படத்தை பயன்படுத்தி போட்டியிடுவதால் வித்தியாசமான முறையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கூடுவாஞ்சேரியில் போட்டியிடும் ராதிகா பார்த்தசாரதி இன்று கூடுவாஞ்சேரி 17வது வார்டு பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது தீவிர விஜய் ரசிகர் மணி என்பவர், நடிகர் விஜய் குறித்த கானா பாடல்களை பாடி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை கேட்டனர். இந்த வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடையே கவனத்தைப் பெற்றது. இதனை அடுத்து வேட்பாளர் வீடு வீடாக சென்று தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை துண்டுப் பிரசுரமாக அளித்து வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். தீவிர வாக்கு சேகரிப்பின் போது மாவட்ட தொண்டரணி தலைவர் எம்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட ஏராளமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்
கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் விஜய் கொடி மற்றும் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பிரதிநிதிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மக்கள் பணியை திறம்பட செயல்பட வேண்டும் என விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றி பெற்ற அனைவருக்கும் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்தார் .
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுகிறது. விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசியல் விமர்சகர்கள் விஜய் மக்கள் இயக்க செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வருகின்ற நகர்ப்புற தேர்தல் விஜய் மக்கள் இயக்கத்தின் மிக முக்கிய தேர்தலாக அமைந்துள்ளது.