திருவண்ணாமலை, தெற்கு மாவட்ட பாஜகவின் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை நகராட்சி, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் மற்றும் செங்கம் ஆகிய 3 பேரூராட்சிகளில் 42 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா சிலை அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மாநில தலைவர் அண்ணாமலை, “கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த 513 தேர்தல் வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்த 73% சதவிகித பெண்களுக்கு இதுவரை நகை கடன்கள் தள்ளுபடி செய்யாமல் திமுக அரசு ஏமாற்றிவிட்டதாகவும், கடந்த 8 மாத திமுக ஆட்சியில் திமுக மத்திய அரசை பழித்தும், பிரதமர் மோடியை குறை கூறியும் வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மேலும் மக்களின் ஆட்சியில் விடியல் ஏற்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசின் 8 மாத கால ஆட்சியில் மக்களின் வாழ்க்கையில் எத்தகைய விடியலும் ஏற்படவில்லை என்றும், பின்னர் திருவண்ணாமலையில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் தொடர்ந்து இருக்கின்றார். அடுத்தபடியாக அவருடைய மகன் அரசியலுக்கு வந்துள்ளார். திருவண்ணாமலை மக்களுக்கு விடியல் கிடைக்கும் என்பது நிச்சயம் இல்லை. ஏனென்றால் கோபாலபுரத்தில் நடக்கின்ற குடும்ப ஆட்சி தற்போது திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. இதுபோன்று திமுகவில் குடும்ப ஆட்சி நடக்கின்றபோது பாமர மக்களுக்கு எப்படி விடியல் கிடைக்கும்.
ஆனால் பாஜகவில் வேட்பாளராக நிற்கக் கூடியவர்கள் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு நீங்கள் வெற்றி பெற வைத்தால் உங்களுக்கு அவர்கள் விடியல் கொண்டு வருவார்கள் என்றும், பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு மட்டும் அல்ல ஏவுகணையை வீசினால் கூட தமிழகத்தில் பாஜக கால் ஊன்றும் என்றும், நீட் தேர்வினால் முன்பை விட தற்போது அதிகளவு கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்புக்களில் சேர்ந்து வருகின்றனர் என்றும், நீட் தேர்வை அரசியலாக்கி திமுக ஆரசியல் செய்து வருவதாகவும், மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றும் அண்ணாமலை பேசினார்.
பிரச்சார கூட்டம் முடிந்தவுடன் வந்திருந்த கட்சி தொண்டர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தொண்டர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மத்திய உணவு பெறுவதற்கு கூடியதால் ஒருவரை ஒருவர் முண்டியடித்து உணவு வாங்க முற்பட்டனர் அப்பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னதாக அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.