தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல்  தலைமையில் நடைபெற்றது.


 




 


 


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்ததாவது: கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி - IV) எதிர்வரும் 09.06.2024 அன்று முற்பகல் மட்டும் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திலிருந்து வரப்பெறும் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் கரூர் மாவட்டத்தில் மாவட்ட கருவூலம் , அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் சார்நிலை கருவூலங்களில் வைக்கப்படவுள்ளது. மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலக பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், உரிய நேரத்தில் நடமாடும் குழுக்களுக்கு மேற்கண்ட தேர்வுப் பொருட்களை வழங்கவும், தேர்வு நடைபெறும் நாளன்று தேவையான பணியாளர்களுடன் தயாராக இருக்கவும் வேண்டும். பாதுகாப்பிற்காக தலா ஒரு தீயணைப்பு வண்டி மற்றும் மூன்று தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர்களை நியமனம் செய்திடவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 




 


தேர்வு நடைபெறும் நாளில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கிடுமாறும், தேர்வு நடைபெறும் நாளில் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்திற்கு சென்று சேர ஏதுவாக சிறப்புப் பேருந்து வசதிகளை எற்படுத்திடவும், சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், வெளிச்சம் மற்றும் மின்வசதி மற்றும் போதிய காற்றோட்ட வசதி போன்ற அனைத்து வசதிகளும் அனைத்து தேர்வு மையங்களில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தேர்வு நடத்த ஏதுவாக தேர்வு மையங்களுக்கு 99 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வாணையத்தில் இருந்து வரப்பெறும் வினா விடைத்தாள்கள் போதுமானதாக உள்ளதா என்பதனை சம்பந்தப்பட்ட முதன்மை கண்காணிப்பாளர்கள் சரிபார்த்துக் கொள்ளவும், அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறும் அறைகளுக்கு ஆசிரியர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்க வேண்டும். தேர்வு அறைகளில் ஒரு அறைக்கு 20 தேர்வர்கள் மட்டும் அமருமாறு நாற்காலிகள் அமைத்திடவும், தேர்வுக்கூடங்களுக்குள் எவ்விதமான மின்னணு கருவிகளும் கொண்டு வராமல் இருப்பதை உறுதி செய்திடவும், தேர்வு எழுதிட உதவி தேவைப்படக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய ஏற்பாடு செய்திடவும், மேற்கண்ட தேர்வர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கூடுதலாக 20 நிமிடங்கள் ஒதுக்கிடவும் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவு எண் மேசையின் மீது போடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடவும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 


 




 


தேர்வர்களின் வருகைப்பதிவு விவரத்தினை கைப்பேசி செயலி வாயிலாக காலை 10.30 மணிக்குள் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்திட வேண்டும். தேர்வு முடிந்த பின்னர் தேர்வு மையங்களில் இருந்து வரப்பெறும் விடைத்தாள்கள் மற்றும் பயன்படுத்தப்படாத வினாத்தாள்களை கருவூலங்களில் ஒப்படைக்கும் பணியினை உடன் இருந்து கண்காணித்திடவும், அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்ணைந்து பணியாற்றி சுமூகமான முறையில் தேர்வு நடைபெறுவதை உறுதி செய்திடவும் அனைத்து வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கரூர் மாவட்ட கருவூலம், அரவக்குறிச்சி / குளித்தலை/ கிருஷ்ணராயபுரம் / கடவூர் சார்நிலை கருவூலங்களில் வைக்கப்படும் வினாத்தாள்கள், விடைத்தாள்கள் மற்றும் இதர தேர்வு பொருட்களின் பாதுகாப்பு பணிக்காக 5 ஆயுதம் ஏந்திய காவலர்களையும், வினாத்தாள்கள், விடைத்தாள் மற்றும் இதர தேர்வு பொருட்களை சார்நிலை கருவூலங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லும் நடமாடும் குழுக்களின் (Mobile Unit) பாதுகாப்பு பணிக்காக 25 ஆயுதம் ஏந்திய காவலர்களையும், தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக 99 ஆயுதம் ஏந்திய காவலர்களையும், நியமனம் செய்யப்பட உள்ளார் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி  உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.