CONG -TMC: மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலில் 42 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.


I.N.D.I.A. கூட்டணி:


பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் இணைந்து, I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கின. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதி என பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், இந்த கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு என்பது உறுதியாகவில்லை. அதேநேரம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.


காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் கருத்து மோதல்:


இழுபறிக்கு சான்றாக தான் மேற்குவங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே, தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. அதிகபட்சமாக 2 தொகுதிகள் வரை ஒதுக்க தயார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால், தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. இதனால், இருதரப்புக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ராகுல் காந்தியின் நியாய யாத்திரையில் கூட மம்தா பங்கேற்கவில்லை. அதோடு, தங்களது கட்சி 42 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கும் என அறிவித்தார்.


காங்கிரசுக்கு 5 தொகுதிகளா?


இந்த சூழலில் தான், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள,  100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மேற்கு வங்கத்திற்கு விடுவிக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதினார். அதோடு, திரிணாமுல் காங்கிரஸ் உடனான பிரச்னை பேசி தீர்க்கப்படும் எனவும் காங்கிரஸ் தெரிவித்து வந்தது. இப்படி இருக்கையில், இருதரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், காங்கிரசுக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாகவும் கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால், தங்கள் நிலைப்பாட்டில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.


”மேற்குவங்கத்தில் காங்கிரசுடன் தொகுதிப்பங்கீடு இல்லை”


தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன், “சில வாரங்களுக்கு முன்பு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்று கூறினார். அசாமில் ஒரு சில தொகுதிகளிலும், மேகாலயாவில் உள்ள தூரா மக்களவைத் தொகுதியிலும் நாங்கள் போட்டியிடுகிறோம். இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை” என விளக்கமளித்துள்ளார். இது காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமின்றி, ஒட்டுமொத்த I.N.D.I.A. கூட்டணிக்கே பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.