தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த வாக்குப்பதிவில் இன்று காலை முதலே பல அரசியல் கட்சியின் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் வாக்களித்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் தங்களது ஜனநாயக கடமையான தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையின் 122 வார்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்துடன் வாக்களித்தார். தேனாப்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி கல்லூரியில் முதலமைச்சர் தன்னுடைய குடும்பத்துடன் வாக்களித்தார்.
தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களிக்க சென்றபோது, வாக்குசாவடி மையத்தில் பணியில் இருந்த தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் அவரை கண்டதும் உற்சாகமடைந்தார்.
தொடர்ந்து, பணியில் ஈடுபடாமல் அந்த பெண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகைப்படம் எடுத்தும், அவருடன் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். இதனை எதையும் கண்டுக்காத மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் வரிசையாக நின்று தனது வாக்கினை செலுத்தினார். தற்போது, அந்த தேர்தல் நடத்தும் அலுவலர் புகைப்படம் எடுக்க முயற்சித்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்