சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் 699 பதிவிகளுக்கான தேர்தலில் பேரூராட்சியில் ஏற்கனவே 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மிதமுள்ள 695 பதவிகளுக்கான தேர்தல் 1514 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் 6,076 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.



சேலம் மாநகராட்சிக்கான 60 வார்டுகளில் 189 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 618 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சேலம் மாநகராட்சியில் 709 வாக்குச்சாவடிகளில் 7,19,361 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதேபோல சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், மேட்டூர், இடங்கணசாலை, தாரமங்கலம் எடப்பாடி மற்றும் நரசிங்கபுரம் என 6 நகராட்சிகளில் 165 பதிவிகளுக்காக 682 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 6 நகராட்சிகளில் 273 வாக்குச்சாவடிகளில் 2,25,775 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். சங்ககிரி, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், பி.என்.பட்டி, மேச்சேரி, வீரக்கல் புதூர், கொளத்தூர், நங்கவள்ளி, வீரகனூர், கெங்கவல்லி, தெடாவூர், செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன் பாளையம், பேளூர், வாழப்பாடி, ஓமலூர், காடையாம்பட்டி, கருப்பூர், ஆட்டையாம்பட்டி, அயோத்தியாபட்டணம், கன்னங்குறிச்சி, இளம்பிள்ளை, மல்லூர், பனமரத்துப்பட்டி, தேவூர், அரசிராமணி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் மற்றும் வனவாசி என 31 பேரூராட்சிகளில் 474 பதவிகளுக்கு 1906 வேட்பாளர்கள் போட்டியிட்டுகின்றனர். 31 பேரூராட்சிகளில் 537 வாக்குச்சாவடிகளில் 3,90,894 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 



சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,514 வாக்குச்சாவடிகளில் 204 மண்டலம் அலுவலர்களும், 6,076 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 276 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள், 138 வாக்குச்சாவடிகளில் நேரடி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது, மீதமுள்ள 138 மையங்களில் நுண் பார்வையாளர்களை கொண்டு கண்காணிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் எந்தவித அச்சங்களும் இன்றி தங்களது ஜனநாயக கடமையை சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக் கவசங்கள் அணிந்து வாக்களிக்க வேண்டும் என சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம் முழுவதும் 38 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 87 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சேலம் மாநகராட்சியில் 1 வாக்கு எண்ணும் மையமும், 6 நகராட்சிகளுக்கு 6 வாக்கு எண்ணும் மையமும், 31 பேரூராட்சிகளில் 9 வாக்கு எண்ணும் மையம் என சேலம் மாவட்டத்தில் மொத்தம் 16 மையங்களில் வருகிற 22 தேதி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணி வேட்பாளர்கள் முடிவு அறிவிக்கப்படும்.