TN Lok Sabha Election Result 2024: தமிழ்நாடு மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் (Vote Percentage) தொடர்பான விவரங்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. 21 இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்தாலும், வாக்கு சதவிகிதம் என்பது அதிமுக மற்றும் பாஜகவிற்கே சாதகமாக அமைந்துள்ளது. அதோடு, நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்து பெறும் அளவிற்கு வாக்கு வங்கியை பலப்படுத்தியுள்ளது.
சரிந்த திமுக வாக்கு சதவிகிதம்:
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட, 24 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அப்போது அக்கட்சி பதிவான மொத்த வாக்குகளில் 33.52 சதவிகித வாக்குகளை பெற்று இருந்தன. ஆனால், இம்முறை 22 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக வெறும் 26.93 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன. அதாவது கடந்த தேர்தலை காட்டிலும் நடப்பாண்டு தேர்தலில், திமுகவின் வாக்கு சதவிதம் 6.5 சதவிகிதம் சரிந்துள்ளது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
முன்னேற்றம் கண்ட அதிமுக:
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சியானது 19.39 சதவிகித வாக்குகளை பெற்றதோடு, தேனி தொகுதியில் மட்டும் வெற்றி வாகை சூடியிருந்தது. ஆனால், இம்முறை எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், மொத்தம் பதிவான வாக்குகளில் 20.46 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது கடந்த தேர்தலை விட சுமார் 1 சதவிகிதம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது.
பாஜகவிற்கு ஜாக்பாட்:
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த களமிறங்கிய பா.ஜ.க., 3.66 சதவிகித வாக்குகளை பெற்றது. ஆனால், இந்தமுறை பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டு, 11.24 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது கடந்த தேர்தலை விட சுமார் 7.68 சதவிகித வாக்குகளை கூடுதலாக பெற்று பாஜக பெரும் வாக்கு வங்கியை ஈர்த்துள்ளது. இது அக்கட்சிக்கும் பெரும் முன்னேற்றமாக கருதப்படுகிறது.
மாநில அந்தஸ்து பெறும் நாம் தமிழர் கட்சி:
கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 3.9 சதவிகித வாக்குகளை பெற்றது. இம்முறையும் தனித்து போட்டியிட்டதோடு, கரும்பு விவசாயி சின்னமும் இன்றி களமிறங்கியது. அப்படி இருந்தும் பல தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது சுமார் 8 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை, அக்கட்சி பெற்றதாக கூறப்படுகிறது. அதன் மூலம் நாம் தமிழர் கட்சியை விரைவில் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.