தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில், 2022 ஏப்ரல் 30 வரை காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்திட, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஜூலை 9 அன்று அதற்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜூன் 20ல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 9ல் வாக்குப்பதிவும், ஜூலை 12ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல்  இன்றுடன் முடிவடைகிறது.

 



36 வது வார்டில்..

 

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை , காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதில் 36வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து அந்த வார்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற 50 வார்டுகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது . தற்பொழுது வேட்பு மனு தாக்கல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 



 

உயிரிழந்த ஜானகி ராமனின் தந்தை..

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, இந்த வார்டு பகுதியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப்பு என்கிற சுப்புராயன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல கடந்த நகர் மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, இந்தத் தேர்தலிலும் போட்டியிடருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் கண்ணிவேல்  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முக்கிய கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் உயிரிழந்த காரணத்தால், நிறுத்தப்பட்ட தேர்தலில் அதிமுகவின் சார்பாக அதிகாரபூர்வ வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த ஜானகி ராமனின் தந்தை வேணுகோபால் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். எனவே இவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல், சுயேட்சையாக ஏதாவது சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

 



 

அங்கீகார கடிதத்தில் யார்...

 

அதிமுகவில் தற்போது நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்னையால், வேட்பாளர்களுக்கான கட்சி அங்கீகார கடிதத்தில் யார் கையெழுத்து இடுவது என்கிற சிக்கல் உள்ளது உருவாகியுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  கையெழுத்திட்டு கடிதம் வழங்கினால், அதை ஒருங்கிணைப்பாளராக உள்ள பன்னீர்செல்வம் எதிர்க்க அல்லது சட்டரீதியாக ரத்து செய்ய வாய்ப்புள்ளது. அதே போல பன்னீர்செல்வம்  கையெழுத்திட்டால் அதை எடப்பாடி பழனிசாமி எதிர்க்க வாய்ப்புள்ளது. இருவருக்கும் ஏழாம் பொருத்தம் சண்டை சென்று கொண்டிருப்பதால் அதிமுக சார்பில் இருவரும் இணைந்து கையெழுத்திட வாய்ப்பில்லை. வேறு யாருக்கு இதில் அதிகாரம் இருக்கிறது என்பது குறித்த சட்டரீதியான உத்தரவாதமும் இல்லை. இதை வைத்து பார்க்கும்போது, நகர்ப்புறத்தில் நடக்கும் இந்த இடைத் தேர்தலில் இரட்டை இலை சிக்கலாகி உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் , 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.