தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 490 பேரூராட்சி என அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என நேற்று மாநில தேர்தல் ஆணையாளர் பழனி குமார் அறிவித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் 699 கவுன்சிலர்கள் பதவிக்கு வரும் 19 ஆம் தேதி 1,519 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியது. முதல் நாளான இன்றைய தினம் அதிகளவில் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு படிவங்களைப் பெற்றுச் சென்றனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் நபர்கள் கூட்டமாக வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு தேர்தல் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. 



முதல் நாளான இன்று சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் பாரத மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் கதிர்வேல் என்பவர் முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார். சேலம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள நான்கு மண்டலங்களில் தலா 15 வார்டுகள் விகிதம் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் இதுவரை ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 


 


ஆறு நகராட்சிகளான


 


1. ஆத்தூர் - 33 வார்டுகள்


2. மேட்டூர் - 30 வார்டுகள்


3. எடப்பாடி - 30 வார்டுகள்


4. நரசிங்கபுரம் - 18 வார்டுகள்


5. தாரமங்கலம் - 27 வார்டுகள்


6. இடங்கணசாலை - 27 வார்டுகள்



கடந்த நகராட்சி தேர்தலில் 4 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சி கொண்டிருந்த நிலையில் தற்போது தாரமங்கலம் பேரூராட்சி மற்றும் இடங்கணசாலை பேரூராட்சி நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், சேலம் மாவட்டத்தில் தற்போது நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளது. சேலம் நகராட்சியாக இருந்து 1994 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை நான்கு முறை மேயர் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், மூன்று முறை மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருமுறை மட்டும் வார்டு கவுன்சிலர்களுக்கு மறைமுக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.