திருவள்ளூர் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் 7,91,008 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி (Thiruvallur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் முதலாவது தொகுதி ஆகும். கடந்த 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்படி, திருவள்ளூர் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது.
திருவள்ளூர் தொகுதியின் வரலாறு: இதில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி(தற்போது தனி தொகுதி), திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 7 தனி தொகுதிகளில் திருவள்ளூரும் ஒன்று. அதாவது, பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தொகுதி ஆகும். தனித்தொகுதியாக உருவாக்கப்பட்ட திருவள்ளூர் மக்களவை தொகுதியில், சென்னை நகரின் சில பகுதிகளும், புறநகர் பகுதிகளும் அடங்கும்.
ஜெயிக்கப்போவது யார்? கும்மிடிபூண்டி, பொன்னேரி தவிர மற்ற பகுதிகளில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இவற்றில் பணியாற்றும் பணியாளர்களும், தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் தொகுதி இது. அதாவது வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஒன்று என கூறலாம்.
ஆந்திரமாநிலத்தின் எல்லையை ஒட்டி இருப்பதால் இங்கு தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம். ஆதிதிராவிட மக்களும் வன்னியர்களும் கணிசமாக உள்ளனர்.
திருவள்ளூர் மக்களவை தொகுதியில் கடந்த 1951, 1957 மற்றும் 1962ம் ஆண்டுகளில் என மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அனைத்திலுமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள்தான் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
அதேநேரம், 2008ம் ஆண்டு, புதிய பகுதிகளை உள்ளடக்கிய பிறகு திருவள்ளூர் தொகுதிக்கு இதுவரை, மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு முறை அதிமுக வேட்பாளரும், ஒருமுறை திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
வாக்காளர்கள் விவரம் (2024):
ஆண் வாக்காளர்கள் - 10,10,968
பெண் வாக்காளர்கள் - 10,46,755
மூன்றாம் பாலினத்தவர் - 375
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
கும்மிடிப்பூண்டி - கோவிந்தராஜன் (திமுக)
பொன்னேரி - துரை சந்திரசேகர் (காங்கிரஸ்)
பூந்தமல்லி - கிருஷ்ணசாமி (திமுக)
திருவள்ளூர் - வி.ஜி. ராஜேந்திரன் (திமுக)
ஆவடி - நாசர் (திமுக)
மாதவரம் - சுதர்சனம் (திமுக)
இந்த தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 8 பேர், சுயேட்சை வேட்பாளர்கள் 6 பேர் என 14 பேர் போட்டியிடுகின்றனர். இந்தியா கூட்டணி சார்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.
பாஜக சார்பில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பொன். வி. பாலகணபதி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக இளைஞரணி செயலாளர் நல்லதம்பி களம் காண்கிறார். பாஜக வேட்பாளர் களத்தில் இருந்தாலும், திமுக, அதிமுக கூட்டணிக்கு இடையேதான் போட்டி என எதிர்பார்க்கப்படும் சூழலில், வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.