திருச்சி மக்களவை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக சார்பில் துரை வைகோ 5,42,213 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சி எம்.பி. துரை வைகோ பேட்டி
”திருச்சி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மாணவ ,மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம், மகளிர் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர்க்கு இலவச பேருந்துகள் திட்டம் உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த வெற்றி தான் இது. திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.மேலும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ரகுபதி மையநாதன் ஆகியோர்களுக்கு கிடைத்த வெற்றி.. இந்த எளியவனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தி உள்ளீர்கள். இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் உறுதியாக செய்வேன் என வாக்குறுதி கூறுகிறேன். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருடன் இணைந்து செயலாற்ற நான் தயார்.” என்று அவர் தெரிவித்துள்ளார்
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. திருச்சி தொகுதியில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை பற்றி காணலாம்.
இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அடங்கிய 40 தொகுதிக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவானது நடைபெற்றது. தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக ஆகிய 4 கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டியானது நிலவியது. இப்படியான நிலையில் திருச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதில் துரை வைகோ முன்னிலை வகித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. திருச்சி தொகுதியில் 2 மணி நிலவரப்படி துரை வைகோ (மதிமுக) 1,58,403 வாக்குகளும், கருப்பையா (அதிமுக) 74,583 வாக்குகளும், ஜல்லிக்கட்டு ராஜேஷ் (நாம் தமிழர் கட்சி) 32,975 வாக்குகளும், செந்தில் நாதன் (அமமுக) 35,866 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தொகுதி ஓர் அறிமுகம்
தமிழ்நாட்டில் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருச்சி மக்களவை தொகுதி. சுற்றிலும் ஆன்மீக தலங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் என பார்க்கவே மிகவும் ரம்மியமான தொகுதியாகும். மாநில மற்றும் தேசிய கட்சிகள் வேட்பாளர்கள் கூட திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை 12 மக்களவை தேர்தலை சந்தித்துள்ள திருச்சியில் காங்கிரஸ் 4, அதிமுக 3, கம்யூனிஸ்ட் 2 , திமுக, பாஜக, மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
ஓட்டு போட்டவர்களின் விவரம்
திருச்சிராப்பள்ளி தொகுதியில் 7,57,130 ஆண் வாக்காளர்களும், 7,96,616 பெண் வாக்காளர்களும், 239 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இவர்களில் 5,12,150 ஆண் வாக்காளர்களும், 5,36,844 பெண் வாக்களர்களும், 99 மூன்றாம் பாலினத்தவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தியுள்ளனர்.
முக்கிய வேட்பாளர்கள் யார்? யார்?
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசும், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் டாக்டர் வி.இளங்கோவனும் போட்டியிட்டனர். இதில் திருநாவுக்கரசு வெற்றி பெற்றார்.
இந்த முறை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக சார்பில் துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் களம் கண்டுள்ளனர்.