ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் குரு என்ற குருசாமி (40). இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பெருந்துறையில் சுசி ஈமு பாம்ஸ் பிரவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடந்தி வந்தார். அப்போது இந்த நிறுவனத்தின் மூலம் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அதனை பிரபல நடிகர்களை கொண்டு ஊடகங்களில் விளம்பரம் செய்தார். தனது நிறுவனத்தில் இரண்டு விதமான ஈமு திட்டங்கள் இருப்பதாக விளம்பரப்படுத்தினார். அதன்படி முதல் திட்டத்தில் 1.50 லட்ச ரூபாய் பணம் முதலீடு செய்தால், 6 ஈமு கோழிகள் வழங்கப்படுவதுடன், செட் அமைத்து தந்து தீவனம் மருந்து மற்றும் பராமரிப்பு பணமாக மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஒரு ஆண்டுக்கு பின்னர் போனசாக 20ஆயிரம் ரூபாயும், இரண்டு வருடம் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


இதேபோல இரண்டாவது திட்டமான விஐபி திட்டத்தில் 1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஈமு கோழிகளை தாங்களே பராமரித்துக் கொள்வதுடன் மாதம் 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும்  போனசாக வருடத்திற்கு 30 ஆயிரம் ரூபாய்  வழங்கப்படும் என்றும், இரண்டு வருடம் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 96 பேர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதில் பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2012ஆம் ஆண்டு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நாமக்கல் காவல் துறையினர் குருசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.




இது தொடர்பான வழக்கு கோவை டான்பிட்  நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சுசீ ஈமு நிறுவன உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி ரவி, இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் குருசாமி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈமு கோழி வளர்ப்பு மற்றும் ஈமு கோழி பண்ணையில் முதலீடு செய்தால் அதிக இலாபம் ஈட்ட முடியும் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதனை நம்பி மேற்கு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் முதலீடு செய்தனர். ஆனால் சில மாதங்களில் முறையாக பணம் தராமல் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஈமு கோழி மோசடி தொடர்பான வழக்குகளில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக நீதிமன்ற தீர்ப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.