திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒவ்வொரு தேர்தலிலும் படிப்படியாக நலிந்துவரும் வரும் தேமுதிக, நகர்ப்புற தேர்தலில் வேட்பாளர்களைகூட நிறுத்த முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திரைப்பட நடிகராக மக்களிடம் தனக்கு கிடைத்த அறிமுகத்தை பயன்படுத்தி, கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக எனும் கட்சியை விஜயகாந்த் உருவாக்கினார். 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றது. எனவே, தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும் மாற்றுக்கட்சியாக தேமுதிக உருவெடுக்கும் என விஜயகாந்த் நம்பினார். ஆனால், 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 எம்.எல்.ஏக்களை பெற்றிருந்தாலும் தேமுதிக தனித்தன்மையை இழந்தது அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தொடர் சரிவை சந்தித்தது. 




கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது. ஆனால், அந்த இரண்டு எம்எல்ஏக்களைகூட அக்கட்சியால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இரண்டு நபர்களும் அதிமுகவுக்கு தாவிவிட்டனர். இந்த மாவட்டத்தில், கட்சியை வழிநடத்த ஆள் இல்லாத நிலையில், நகர்ப்புற தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தக்கூட முடியாத பரிதாப நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில், தற்போது 4 நகராட்சிகளில் 123 வார்டுகளுக்கும், 10 பேரூராட்சிகளில் 150 வார்டுகளுக்கும் தேர்தல் நடக்கிறது. ஆனால், ஆரணி நகராட்சியில் 3 வார்டுகளிலும், வந்தவாசி மற்றும் திருவண்ணாமலை நகராட்சிகளில் தலா 1 வார்டுகளிலும் மட்டுமே தேமுதிக போட்டியிடுகிறது.



அதேபோல், தேசூர் மற்றும் பெரணமல்லூர் பேரூராட்சிகளில் தலா 2 வார்டுகளிலும், சேத்துப்பட்டு, போளூர், வேட்டவலம் ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டுகளிலும், செங்கம் பேரூராட்சியில் 6 வார்டுகளிலும் என மொத்தம் 18 இடங்களில் மட்டுமே தேமுதிக வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. செய்யாறு நகராட்சியில் ஒரு வேட்பாளரை கூட நிறுத்த முடியவில்லை. தேர்தல் பிரசாரத்துக்கு விஜயகாந்த் நேரடியாக வந்தவரைதான், தேர்தலில் போட்டியிட கட்சியினர் ஆர்வம் செலுத்தினர். அவரால், தேர்தல் பிரசாரத்துக்கு வரமுடியவில்லை.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிற்கவில்லை என்றால் கட்சி யின் மானம் பரிபோகிவிடும் என்பதால் வலுக்கட்டாயமாக தேமுதிக சார்பில் வேட்பாளர்கள் நிற்கவைக்கப்பட்டாலும் பரப்புரை செய்ய கடைசி நாளான நேற்று கூட யாரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவில்லை