திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 5,58,866 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
முல்லைப் பெரியாற்றின் இருகரைகளிலும் திராட்சை, நெல், வாழை, தென்னை என பச்சை பசேல் என்று விவசாயம் நிறைந்த பூமியாக தேனி மக்களவைத் தொகுதி காட்சியளிக்கிறது. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த தொகுதி, ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.
தேனி தொகுதியின் வரலாறு: விவசாயம் பிரதான தொழிலாக இருக்க, சிறுதொழில்கள், தொழிற்சாலைகள், விவசாயம் தொடர்பான தொழில்கள் அடுத்தபடியாக உள்ளன. தொகுதிக்குள் இருக்கும் வடுகபட்டி பூண்டுச் சந்தைதான் தென்னிந்தியாவிலேயே பெரிய பூண்டுச் சந்தை.
இந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்து சிறுபான்மையினர், நாயக்கர், நாடார், கவுண்டர் உள்ளிட்ட சமுதாயத்தினர் பரவலாக காணப்படுகின்றனர்.
2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது, பெரியகுளம் மக்களவைத் தொகுதி தேனி மக்களவைத் தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுடன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோழவந்தான் (தனி) மற்றும் உசிலம்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் தேனி மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
அதிமுகவின் கோட்டையாக தேனி மக்களவைத் தொகுதி கருதப்படுகிறது. இதுவரை 9 முறை அங்கு அக்கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது. இத்தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் வென்று தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர் ஆகியுள்ளனர்.
கடந்த 1984-ல் வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த எம்ஜிஆரை வெற்றிபெற வைத்த தொகுதியும் ஆண்டிபட்டி தான். அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் போடி தொகுதியில் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆனார்.
வாக்காளர்கள் விவரம் (2024):
ஆண் வாக்காளர்கள் - 7,92,195
பெண் வாக்காளர்கள் - 8,20,091
மூன்றாம் பாலினத்தவர் - 217
மொத்த வாக்காளர்கள் - 16,12,503
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
ஆண்டிப்பட்டி - மகாராஜன் (திமுக)
பெரியகுளம் (தனி) - சரவண குமார் (திமுக)
போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர் செல்வம் (அதிமுக)
கம்பம் - ராமகிருஷ்ணன் (திமுக)
சோழவந்தான் (தனி) - வெங்கடேசன் (திமுக)
உசிலம்பட்டி - ஐயப்பன் (அதிமுக)
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே நபர் ரவீந்திரநாத் மட்டுமே. ஆனால், அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க, அதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தேனி மக்களவை தொகுதி இந்த முறை முக்கியத்துவம் பெற பாஜக கூட்டணியின் சார்பில் அங்கு களமிறங்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனே காரணம். அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார்.
இவர் கடந்த முறை அமமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் போட்டியிட்டு மூன்றாமிடம் பிடித்தார். அதிமுக வேட்பாளராக 40 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றிய வி. டி. நாராயணசாமி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவர் மதன் ஜெயபால் போட்டியிடுகிறார்.
தேனியில் இந்த முறை திமுக, அதிமுக, அமமுக என மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவும் என்பதால் தமிழ்நாடே அத்தொகுதியின் வெற்றியை உற்றுநோக்கியுள்ளது.