தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்த நிலையில் நாளை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதியாக 12 ஆயிரத்து 607 பதவியிடங்களுக்கு, 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பரப்புரை ஓய்ந்ததால் சம்பந்தப் பட்ட வார்டுகளுக்கு தொடர்பில்லாத நபர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பறக்கும் படை மற்றும் போலீசாரின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதையும் மீறி பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் நடந்து வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 26 ஆவது வார்டு இந்திரா நகரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மயிலாவதி தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் அழகுச்செல்வம் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அழகுச்செல்வத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூபாய் 6000 பணத்தை பறிமுதல் செய்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் வந்த இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தாசில்தார் மயிலாவதி அவர்களிடம் விசாரித்தோம் ”செல்போன் மூலம் வந்த புகாரை தொடர்ந்து 26-வது வார்டு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டோம். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக அழகுச்செல்வம் என்ற இளைஞர் அப்பகுதியில் சுற்றிவந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கையில் 6 ஆயிரம் பணம் இருந்தது. மொத்தம் 15 ஆயிரம் பணம் எடுத்து வந்ததாகவும், அதில் விநியோகம் செய்தது போக மீதம் உள்ள பணம் தான் இந்த ஆறாயிரம் பணம் என தெரிவித்தார். 26-வது வார்டு தி.மு.க வேட்பாளரை வெற்றியடைய செய்ய இந்த பணத்தை கொடுத்ததாவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் மூலம் விசாரணை நடத்தி பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்” என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai corporation election 2022 | மதுரையில் பிரச்சாரத்திற்கு சென்ற பிரேமலதா... விஜயகாந்த் சொல்லிக்கொடுத்த அந்த வார்த்தை...!