தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று  காலை 8 மணிமுதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக 142 இடங்களின் முன்னிலையில் உள்ளது. அடுத்தபடியாக அதிமுக 87 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் , கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர் , எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி , ஆயிரம் விளக்கு , அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி என 16  சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.




இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் கூடி பட்டாசு வெடித்து இனிப்புகள் ஊட்டி வெற்றியை கொண்டாடினர். முன்னதாக கொரோனா ஊரடங்கு காரணமாக தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையமும், திமுக, அதிமுக கட்சித் தலைமையும் கேட்டுக்கொண்டன. 






அரசின் உத்தரவையும் மீறி தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே வெற்றிக் கொண்டாட்ட தடையை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யவும், அதை தடுக்கத்தவறும் காவல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யவும் 5 மாநில தலைமை செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 






இந்நிலையில் தொண்டர்களின் கொண்டாட்டம் குறித்து பேசிய டிகேஎஸ் இளங்கோவன், விதிமீறலை தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது. நம் கட்சித்தலைமை அறிவுறுத்தியபடி கட்சித் தொண்டர்கள் வீடுகளிலேயே வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். திமுக மிகவும் பொறுப்பான அரசியல் கட்சி என்றார்.