2021 தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலில் இதுவரை தேசியக் கட்சியான பாரதிய ஜனதா ஐந்து இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட 20 தொகுதிகளில் தற்போது துறைமுகம், நாகர்கோவில், தாராபுரம், உதகமண்டலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பாரதிய ஜனதா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. நாகர்கோவிலில் பாரதிய ஜனதாவின் காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் மற்றும் துறைமுகம் தொகுதியில் வினோஜ் செல்வம் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். மற்றபடி கட்சியின் இதர முக்கிய வேட்பாளர்களான,பாஜக வேட்பாளர் குஷ்பு 1,357 வாக்குகள் பெற்று பின்னடைவில் இருக்கிறார், காரைக்குடியில் பாரதிய ஜனதா வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவில் உள்ளார், அரவக்குறிச்சியில் அண்ணாமலை பின்னடைவில் உள்ளார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவரான எல்.முருகன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
அதிமுகவின் இதர கூட்டணிக் கட்சியான பாமக இதுவரை 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சமீபத்திய நிலவரப்படி, திமுக கூட்டணி கட்சிகள் 134 தொகுதிகளிலும், அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் 100 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக அமோக வெற்றிபெரும் என தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் கடும் போட்டி கொண்டாக மாறியுள்ளது.
கோவிட் தடுப்பு நடவடிக்கை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெற்றி கொண்டாட்டங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது..