தேனி மாவட்டத்தில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. அதிமுக கோட்டையாக பார்க்கப்பட்ட தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிமுக தொடர் தோல்விகளின் சரிவுகளையும்  சந்தித்து வந்ததால் அதிமுகவினர் பெரும் சோர்வடைந்தனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்கு பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கிலும் குறிப்பாக தேனி மாவட்டத்தில் அதிமுக பெரும்பாலான இடங்களை  கைப்பற்ற வேண்டும் எனவும் முடிவு செய்து தேர்தல் களப் பணியை செய்தது .



அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் முழுமையாக தேர்தல் பணியாற்றி வார்டு உறுப்பினர்கள் தேர்வு முதல் அனைத்து பணிகளையும் செய்து அதிமுகவிற்கு முழு பக்கபலமாக செயல்பட்டார். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாகவே அமைந்தது. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த அதற்கான காரணங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சசிகலா மற்றும் அமமுக - அதிமுகவில் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என ஆலோசனை கூறி, கம்பம் முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சையதுகான் தலைமையிலான அமமுக - அதிமுக இணைப்பது தொடர்பான தீர்மானத்தை இயற்றியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 




அதிமுக, அமமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரங்களில் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக அமமுக நிர்வாகிகள் குழப்பத்திலேயே உள்ளனர். குறிப்பாக இன்று நடைபெற்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான  தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான  மறைமுக தேர்தலில் அவர்களை செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கே குழப்பநிலை நீடித்ததாக பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் தேனி மாவட்டத்திலுள்ள பழனிசெட்டிபட்டியில் உள்ள 15 வார்டுகளில் இதில் திமுக 7 வார்டுகளிலும் அமமுக 6 இடங்களிலும் , அதிமுக 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இதில் திமுக சார்பில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 15வது வார்டு உறுப்பினர் பவானி என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் 11வது வார்டு உறுப்பினர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில் அமமுக வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்தி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் இருவரில் ஒருவர் திமுகவிற்கு மற்றொருவர் திமுக ஆதரவளிப்பதாக கூறப்பட்ட நிலையில் அமமுக வேட்பாளர் 8 வாக்குகளுடன் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் இரண்டு பேரின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பதாக அமமுக நிர்வாகிகள் கூறினர்.


இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அமமுக வேட்பாளருக்கு  அதிமுக உறுப்பினர்கள்  வாக்களித்து அமமுகவிடம் பேரூராட்சியை அளித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும்  அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறவிருந்த செயல்வீரர்கள் கூட்டம் திடீரென ரத்து செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்