தனக்கு எதிராக போட்டியிட்ட டிடிவி தினகரனை 2 லட்சத்திற்கு மேலான வாக்குகள் பெற்று தேனி மக்களவை தொகுதியை தட்டி தூக்கினார் தங்க தமிழ்செல்வன்.




தேனி மக்களவை தொகுதி


தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களவை தொகுதிகள் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே வந்து விடுகிறது. பல தொகுதிகள் தான் இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி வருகிறது. அதுபோலதான் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள, சோழவந்தான், உசிலம்பட்டி என இரண்டு சட்டமன்ற தொகுதிகளும் சேர்த்து ஆறு சட்டமன்ற தொகுதிகள் கொண்டது தான் தேனி மக்களவை தொகுதியாகும்.




வி.ஐ.பி அந்தஸ்து பெற்றிருக்கும் தேனி மக்களவை தொகுதி


இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். அதுபோல் போடி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றும் இருக்கிறார்கள். அதுபோல் டிடிவி தினகரன் முதன் முறையாக தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு இத்தொகுதி வி.ஐ.பி அந்தஸ்தும் பெற்றுள்ளது.


களம் கண்ட வேட்பாளர்கள்


இந்த தேனி மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அதிமுக சார்பில் நாராயணசாமி, இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பாரதிய ஜனதா கூட்டணி கட்சி சார்பில் அமமுக டிடிவி.தினகரன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மதன் ஜெயபால் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


வாக்கு எண்ணும் பணி


தேனி பாராளுமன்ற தொகுதியில் ஆண், பெண் என 16,22,949 வாக்காளர்கள் உள்ளனர். 1788 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 11,33, 513வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இந்த வாக்குப்பதிவுக்கு பின் நேற்று வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணி முதல் நடைபெற்றது. இதில் மொத்தம் 23 சுற்றுகள் வீதம் வாக்குகள் எண்ணப்பட்டு மாலை 7 மணிவரையில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று முடிவடைந்து உள்ளது.




வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்


இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் 5,71,493 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வெற்றி பெற்றார். அதே போல் பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சியின் அமமுக டிடிவி தினகரன் 2,92,668 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இதே போல் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 1,55,587 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மதன் ஜெயபால் 76,83 வாக்குகள் பெற்றிருந்தார்.


தங்கதமிழ்செல்வனின் வெற்றியும், சாதகமான சூழலும்


அதிமுக, அமமுகவிலிருந்து வந்து, திமுக  உட்கட்சி பிரச்னைகளுக்கும் காரணமானவர். மூத்த நிர்வாகிகளை மதிக்காதவர் எனவும் கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகளை வைத்திருந்த தங்க தமிழ்செல்வன் என பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்தது. உட்கட்சியிலேயே இவருக்கு யார் ஓட்டு போடுவா என்ற கேள்விகளும் எழுந்திருந்தது.


ஆனால் வாக்கு எண்ணிக்கயில் பார்த்தபோது தேனி மாவட்டத்தில் உள்ள திமுக வாக்குகள் அனைத்தும் மாறாமல் அப்படியே தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு கிடைத்துள்ளது என தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2 லட்சத்திற்கும் அதிகமான சிறுபான்மையினர் வாக்குகள், பட்டியலின மக்களின் வாக்குகள் மொத்தமாக திமுகவுக்கு கிடைத்திருக்கிறது. அதேபோல அதிமுகவின் கட்சி பிளவு, டிடிவி தினகரன் பிரச்சாரம் போதுமானதாக இல்லை என்ற பல்வேறு காரணங்கள் தங்கள் தமிழ்செல்வனுக்கு சாதமாகி விட்டது எனவும் சொல்லப்படுது.




டிடிவி பின்னடைவு ஏன்?


தேனி பாராளுமன்ற தொகுதியில் முன்பு எம்.பி-யாக இருந்த டிடிவி தினகரனுக்கு தேனி தொகுதி மிகவும் பழக்கப்பட்டது. தேர்தல் பரப்புரைக்கு செல்லும் இடங்களில் அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதனால் அந்த ஆதரவு அனைத்தும் வாக்குகளாக மாறும் என டிடிவி தினகரன் எதிர்பார்த்தார், ஆனால் இல்லை, டிடிவி தினகரன் நேரடியாக போட்டியிடுவதால் கூட்டணி கட்சிகளின் வாக்குகளுடன், தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய வாக்குகளும், பெரும்பாலான அ.தி.மு.க வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என நம்பினார்.


அவர் எதிர்பார்த்ததை போல அந்த வாக்குகள் முழுமையாக டிடிவி தினகரனுக்கு கிடைக்கவில்லை. பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினர், பட்டியலின சமூக வாக்குகளை பெற முடியவில்லை. குறிப்பாக கிராமங்களில் டிடிவி தினகரனின் குக்கர் சின்னம் பெரிய அளவில் சென்றடையாததும் அவருக்கு வாக்குகள் குறைய காரணமாக அமைந்து இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்தார்.