Lok Sabha Election Result 2024: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒரே விமானத்தில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்களவை தேர்தல் முடிவுகள்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. பாஜக கூட்டணி 290 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், மத்தியில் யார் ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


NDA கூட்டணி & I.N.D.I.A. கூட்டணி ஆலோசனை:


பா.ஜ.க. 240 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனாலும், தனிப்பெரும்பான்மை பெற முடியாததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியுள்ளது. மறுமுனையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணியும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், தற்போதைய சூழலில் மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டுமானாலும், நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறும் நோக்கில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. அதேநேரம், I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டமும் இன்று மாலை 6 மணியளவில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினும், டெல்லி விரைந்துள்ளார்.


ஒரே விமானத்தில் பயணித்த நிதிஷ் & தேஜஸ்வி யாதவ்:


டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டதில் பங்கேற்க NDA கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரும், I.N.D.I.A. கூட்டணியில் உள்ள தேஜஸ்வி யாதவும் பீகாரில் இருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இரண்டு முக்கிய தலைவர்களும் ஒரே விமானத்தில் பயணித்து இருப்பது கவனம் ஈர்த்துள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு வரை நிதிஷ் மற்றும் தேஜஸ்வி ஆகிய இருவரும் சேர்ந்து தான், பீகாரில் ஆட்சி செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இன்றைய பயணத்தின் போது, I.N.D.I.A. கூட்டணிக்கு வருவது தொடர்பாக நிதிஷ்குமாரிடம் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், தேஜஸ்வி யாதவ் தலைமயிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.


மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி:


தங்களுக்கு ஆதரவு அளித்தால் நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவியையும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும் I.N.D.I.A. கூட்டணி தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதனிடையே, தங்களுக்கு சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என, நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவருமே பாஜக தலைமையை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக, இன்று மாலை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கருதப்படுகிறது.