Telangana Assembly Election 2023: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா அறிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு:


ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,வரலாறு எப்போதும் நினைவில் வைத்திருக்கும் வகையிலான ஒரு தேர்வை காலம் நமக்கு வழங்குகிறது. அரசியல் நலன் மற்றும் பெரிய பொதுநலன் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இப்போது உள்ளது. ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி வரவிருக்கும் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க முடிவு செய்திருக்கும் தியாகத்தின் இந்த முக்கியமான கட்டத்தில் இன்று நான் நிற்கிறேன். ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி பல தொகுதிகளில் காங்கிரஸின் வாக்கு வங்கியை சிதைக்கும் என கருத்துக்கணிப்புகள் காட்டுவதால், அவர்களுக்கான வாக்குகள் பிளவுபடாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.  தெலங்கானாவைக் காப்பாற்றுவதற்கான வரலாற்று நிகழ்வுக்கும்,  உடனடித் தேவையான கே.சி.ஆரின் கொடூரமான ஆட்சியை அகற்றுவதற்கு களம் அமைக்கப்பட்டுள்ளது. நான் எப்போதுமே தெலங்கானாவிற்காகவே நிற்கிறேன்.  மற்ற விஷயங்கள் அனைத்தும் எனக்கு அடுத்ததாகவே வரும். அதன் விளைவாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்.  எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஒய்எஸ்ஆர் ரசிகர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ஒய்.எஸ். ஷர்மிளா வலியுறுத்தியுள்ளார்.






தெலங்கானா தேர்தலில் பெரும் திருப்பும்:


ஐந்து மாநில தேர்தலில், தென்னிந்தியாவில் அமைந்துள்ள தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல், தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.  தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்துள்ள கேசிஆர் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி, மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களில் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாஜக கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. காங்கிரசுக்கும் மாநிலத்தில் ஆதரவு பெருகியுள்ளது. இந்த சூழலில் தான், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியும் தேர்தலில் போட்டியிடமால், காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.


தேர்தல் களம் காங்கிரசுக்கு சாதகமா?  


ஏற்கனவே வேலைவாய்ப்பின்மை, ஊழல், அதிகரிக்கும் கடன் சுமை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என கேசிஆர்-க்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்து தீவிரமாக களமாடி வருகிறது. பெண்கள், வேலையில்லாத இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் விவசாயிகளை கவரும் விதமாக, ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்கும் என பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில்,  ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியும் தேர்தலில் போட்டியிடமால், காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், கூட்டணியில் சேராத ஓய்.எஸ். ஷர்மிளா, தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியை மேலும் வலுவாக்கியுள்ளது. சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றியை இழக்கும் வாய்ப்புள்ள தொகுதிகளில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து, டிசம்பர் 3ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.