தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் திரையுலக பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்த வண்ணம் உள்ளனர். 


119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என  கடந்த அக்டோபர் மாதம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு தேர்தல் திருவிழா களைக்கட்டியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கடந்த ஒரு மாத காலமாகவே தெலங்கானாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். 




2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் 4 மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று விட்ட நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான தெலங்கானாவில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 






தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 பிரதான கட்சிகள் இடையே அங்கு பலத்த போட்டி நிலவுகிறது. மேலும் அங்கு மொத்தமாக 2,290 வேட்பாளர்கள் களம் காண்பதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு பயங்கரமாக எழுந்துள்ளது. பிற மாநிலத்தின் கட்சிகளும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் முடிவுக்காக காத்திருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தல்களின் வாக்குப்பதிவு டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. 


இப்படியான நிலையில் தெலங்கானாவில் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் ஜனநாயக கடமை ஆற்றுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த், நாக சைதன்யா, வெங்கடேஷ், நாகார்ஜூனா, நடிகை அமலா,  இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலி,  உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். இதன் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.