தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மணி நிலவரப்படி, 63.94 சதவிதித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 


ஆளும் பாரத ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 பிரதான கட்சிகள் இடையே அங்கு பலத்த போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களம் காண்பதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது.


தெலங்கானா தேர்தல் 2023: 


தெலங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 30) ​​தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலங்கானா தேர்தலுடன், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஐந்து மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களுக்கான பணிகள் நிறைவடைகிறது. அடுத்த ஆண்டு (2024ல்) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான கணிப்பாகவும் இது பார்க்கப்படுகிறது. 


தெலங்கானாவுக்கு முன்னதாக, சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டசபைகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. தெலங்கானாவில் முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே முக்கியப் போட்டி நிலவும் என நம்பப்படுகிறது. இருப்பினும், தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட பல ஆய்வுகள் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே மோதல் ஏற்படும் என்று கணித்துள்ளது.


அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு முன், பாஜகவைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்தி, பிஆர்எஸ் தலைவர் கேசிஆர், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி என அனைத்துக் கட்சிகளின் தெலங்கானாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 


செய்தி நிறுவனமான பிடிஐயின்படி, தெலங்கானாவில் முதலமைச்சர் கேசிஆர், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி, பாஜக மக்களவை உறுப்பினர்கள் பி.சஞ்சய் குமார், டி.அரவிந்த் உட்பட மொத்தம் 2,290 வேட்பாளர்கள் தெலங்கானாவில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.


மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள் உள்ள மாநிலம் முழுவதும் 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலுக்காக 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் தனது வேட்பாளர்களை 119 இடங்களிலும் நிறுத்தியுள்ளது, அதே நேரத்தில் பாஜகவே 111 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) ஒரு இடத்தை அளித்து, மீதமுள்ள 118 தொகுதிகளில் போட்டியிடுகிறது.


ஐதராபாத் நகரின் 9 தொகுதிகளில் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 2014ல் தொடங்கிய பிஆர்எஸ் வெற்றிப் பயணத்தைத் தொடர ஆர்வமாக உள்ளது. 


தெலங்கானாவில் காங்கிரஸின் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்றது.  மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகியோர் தலைமையில் மாபெரும் பிரச்சாரம் நடைபெற்றது. 


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் தேர்தலில் தெலங்கானாவில் காலை 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


மதியம் 3 மணி நிலவரப்படி 51.89 சதவிதித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.  தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மணி நிலவரப்படி, 63.94 சதவிதித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.