இஸ்ரேல் போர்:


கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதோடு, ஏராளமானோர் சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழிக்கப்படும் என கூறி, இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கைவசம் உள்ள காஸா பகுதியின் மீது மும்முனை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்தனர். இந்த சூழலில் தான் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் எடுத்த முயற்சியின் பேரில், 4 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, தங்கள் வசம் இருந்த 13 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். இதற்கு இணையாக 117 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.  இந்த போர் நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், கூடுதலாக இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டது. 


இஸ்ரேல் சென்ற எலான் மஸ்க்:


இந்நிலையில்,  போரின் தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்விட்டர் தளத்தின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட, ”விளம்பரங்கள் மற்றும் சந்தாக்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம்/கிரசன்ட் ஆகியவற்றிற்கு நன்கொடையாக வழங்கப்படும்" என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.  இதனை தொடர்ந்து, நேற்று  முன்தினம் இஸ்ரேல் சென்றிருந்த எலான் மஸ்க், அங்கு அதிபர் ஜசக் ஹெர்சாக்கை சந்தித்தார்.


அதேபோல, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த எலான் மஸ்க், ஆயுதக்குழுவால் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், ஹமாஸ் குழுவினரால் பணய கைதிகளாக கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 


ஹமாஸின் அழைப்பை ஏற்பாரா? நிராகரிப்பாரா?



பின்னர், பிரதமர் நெதன்யாகுவிடம் பேசிக் கொண்டிருக்கையில், ”நானும் காசாவுக்கு உதவ விரும்புகிறேன். இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு காசாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்ய விரும்புகிறேன். ஆனால், ஹமாஸை முற்றிலுமாக அழிக்க வேண்டும். ஹமாஸை அழிப்பது தவிர வேறு வழி இல்லை" என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், போரால் நிலைக்குலைந்த காசா பகுதிக்கு வர வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினர் எலான் மஸ்குக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் எலான் மஸ்க் இஸ்ரேல் சென்றிருந்த நிலையில், காசாவுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


அதாவது, ஹமாஸின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் பெய்ரூட்டில் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ”போரால் நிலைக்குலைந்த காசா பகுதியை காண வர வேண்டும். காசா எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை காண நீங்கள் (எலான் மஸ்க்) வருமாறு நாங்கள் அழைக்கிறோம்" என்று கூறினார். இஸ்ரேலுக்கு ஆதரவாக மஸ்க் பேசி வரும் நிலையில், ஹமாஸ் படையின் அழைப்பை ஏற்றுக் கொள்வாரா? நிராகரிப்பாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.