சங்கரன்கோவில்:

  


தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,22,739, பெண் வாக்காளர்கள் 1,35,385. மூன்றாம் பாலினத்தவர்கள் 5 என மொத்தம் 2,52,939 வாக்காளர்கள் உள்ளனர். 


1952 ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதி தோற்றுவிக்கப்பட்டது. இதுவரை, 18 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் முக்குலத்தோர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் சம அளவில் உள்ளன. மேலும் யாதவர் மற்றும் செங்குந்தர் வாக்குகளும் கனிசமாக உள்ளன. 




 


1996 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக படுதோல்வி அடைந்தது.போட்டியிட்ட 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெறும்  4 இடங்களை மட்டும் கைப்பற்றியது. அந்தத் தேர்தலில், ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவானனிடம் 8,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால், தனித் தொகுதியான சங்கரன்கோவிலில், அதிமுக 600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்று முதல் இன்று வரை அஇஅதிமுகவின் கோட்டையாக சங்கரன்கோவில் உள்ளது. 2016ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எம்.ராஜலெட்சுமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகத் தேர்வு பெற்றார். 


தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய தொகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த ஊர் மக்கள் நெசவு உள்ளிட்ட ஜவுளி தொழில் பெரும் அளவில் செய்து வருகிறார்கள். ஜவுளிக்கு அடுத்தப்படியாக விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. வேலைவாய்ப்புகள் உருவாக்க்கூடிய தொழில் நிறுவனங்கள் இங்கு பெருமளவில் இல்லை.      ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்கம் காரணமாக இங்குள்ள சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், தற்போதைய அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி மீதுள்ள எதிர்ப்பை  திமுக பயன்படுத்திக் கொள்ள முனைகிறது. கடந்த 1989 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சங்கரன் கோவில் தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லை. அத்தேர்தலில் அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவை திமுக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. அதிமுக (ஜெ) கட்சியின் சார்பாக களமிறக்கப்பட்ட மருதகருப்பன் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். 


நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் அமமுக  கட்சியை தோற்றுவித்தார். சங்கரன்கோவிலில் அமமுக சார்பில் ஆர். அண்ணாதுரை போட்டியிடுகிறார். மேலும், தேவேந்திரகுல வேளாளர் சமூகப் பிரச்சனைகளை  முன்னெடுக்கும் புதிய தமிழகம கட்சி இந்தமுறை தனித்துப் போட்டியிடுகிறது.  அக்கட்சியின் சார்பில்  சுப்பிரமணியம் களமிறக்கப்பட்டுள்ளார். புதிய தமிழகம் அதிமுகவுக்கு செல்ல வேன்டிய வாக்குகளைப் பிரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.         


எனவே, இந்தமுறை  சங்கரன்கோவில் தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்த சங்கரன்கோவில் தொகுதியை இந்தமுறை யார் கைப்பற்றுவார் என்ற கேள்வி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.