இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிகழ்வு தொடர் கதையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மீனவர்கள் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்ட நிலையில், இலங்கை அரசோடு முதல்கட்ட பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்றது. அடுத்த அடுத்த நிகழ்வுகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்து முதல் முறை கைது செய்யப்பட்டால் எச்சரித்து விடுவிக்கப்படுவதாகவும், இரண்டாவது முறை 6 மாத சிறை தண்டனையும், 3வது முறை ஒரு வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.


15 பேர் கைது


நேற்று நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் ஒரு படகை சிறைபிடித்தபோது, காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அதிலிருந்த 15 மீனவர்களை கைது செய்து காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்கின்றனர். மேலும், மதியம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர் என மீனவர்கள் மத்தியில் புகார் இருந்து வருகிறது. இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இன்று ஒரே நாளில் தமிழகத்தின் 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.


தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படை தாக்குவதும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இவற்றோடு கணிசமான மீனவர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது இலங்கையின் காரை நகர் கடற்பரப்புக்கு அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த, 15 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 


நாகப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் இவ்வாறு இலங்கை கடற்படையின் கைதுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரும் காங்கேசன் துறை கடற்கரை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.




மீனவர்கள் அதிருப்தி


தமிழகத்திற்காக பல்வேறு திட்டங்களை செய்துள்ளதாக பேசிக் கொள்ளும் மத்திய அரசு, தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதை தடுக்காமல் இருப்பது மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கடல் எல்லை விவகாரத்தில் தமிழக மீனவர்கள் அலைக்கழிக்கப்படுவதும், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது முதல் கைது நடவடிக்கை வரையிலான அட்டூழியங்கள் தொடர்ந்து வருகின்றன. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அவர்களுக்கான தீர்வை எட்டுமாறு மீனவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்து  வருகின்றனர்.