மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வினர் இந்தியா முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று கன்னியாகுமரி, அகத்தீஸ்வரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, எனது அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். நாட்டின் தென் கோடியில் இருந்து கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை புறப்பட்டுள்ளது. இந்த அலை நீண்ட தூரம் பயணிக்கப்போகிறது. 1991ம் ஆண்டு இதே கன்னியாகுமரியில் இருந்து கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு காஷ்மீர் நோக்கி சென்றேன்.
இந்த முறை கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறேன், நாட்டை துண்டாட நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள். நமது தமிழக மக்களும் இப்போது அதைத்தான் செய்யப்போகிறார்கள். தி.மு.க. – காங்கிரஸ் இந்தியா கூட்டணி துடைத்து எறியப்படும். காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி என்ற தலைக்கணம் இருக்கிறது. அது முற்றிலும் அழிக்கப்படும். தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
தி.மு.க. – காங்கிரஸ் இந்தியா கூட்டணியால் தமிழ்நாட்டில் எந்த வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. அவர்களது வரலாற்றை எடுத்துப்பார்த்தால் வெறும் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும். அவர்களது கொள்கையை பார்த்தால் அரசியலில் ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான் அவர்கள் முதல் இலக்கு.
ஒருபுறம் பா.ஜ.க.வின் பல மக்கள் நலத்திட்டங்கள். அந்த பக்கம் தி.மு.க. – காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் கோடிக்கணக்கான ஊழல்கள். ஆர்டிக்கல் பைபர், 5ஜி, டிஜிட்டல் இந்தியா இது எல்லாம் பா.ஜ.க. மக்களுக்கு தருகிறது. ஆனால், இந்தியா கூட்டணியில் லட்சக்கணக்கான கோடியில் நடந்த ஊழல் உள்ளது. 2ஜி ஊழல் உள்ளது.
இந்த 2ஜி கொள்ளையில் பெரும் பங்கு வகித்தது தி.மு.க. பா.ஜ.க. ஏராளமான விமான நிலையங்களை கட்டியது. பா.ஜ.க. உதான் திட்டங்களை செயல்படுத்தியது. காங்கிரஸ் பெயரில் நாட்டின் பாதுகாப்பு பெயரில் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல் உள்ளது. கேலோ இந்தியா மூலம் விளையாட்டுத்துறையை மிக உன்னதமான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் பெயரில் காமன்வெல்த் விளையாட்டு ஊழல்தான் உள்ளது. கனிமத்துறையில் பல சீர்த்திருத்தங்களை கொண்டு இந்தியா வளத்தை நாம் மேம்படுத்தினால், அவர்கள் பெயரில் கனிம வளத்தை கொள்ளையடித்த நிலக்கரி ஊழல்தான் உள்ளது. இந்த பட்டியலை சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். இதுதான் இந்தியா கூட்டணி நிலைமை.
இவ்வாறு அவர் பேசினார்.