Virudhunagar Lok Sabha Election Results 2024: விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார். 


விருதுநகர் தொகுதி - முன்னிலையில் விஜயபிரபாகரன்


1.10 மணி நிலவரப்படி தேமுதிக சார்பில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் 147271 வாக்குகள் உடன் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸின் பலமாகக் கருதப்பட்ட விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியின் விஜயபிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் களமிறங்க நட்சத்திரத் தொகுதியாக இந்தத் தேர்தலில் விருதுநகர் கவனமீர்த்தது.


மற்றொருபுறம்  2009, 2019ஆம் ஆண்டுகளில் விருதுநகர் தொகுதியில் வென்று எம்பி பதவி வகித்த மாணிக்கம் தாகூர், மூன்றாம் முறையாக இந்த முறையும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.  காலை முதல் அவர் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தாலும் 147239 வாக்குகளுடன் 32 வாக்குகள் வித்தியாசத்திலேயே தற்போதைய நிலவரப்படி பின்தங்கியுள்ளார்.


நடிகை ராதிகா சரத்குமார் 56,948 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் கவுசிக் 29,234 வாக்குகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.  விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு அவரது பூர்விக மண்ணான விருதுநகரில் விஜய பிரபாகரன் முதன்முறையாகக் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது கவனமீர்த்துள்ளது.