தென்காசி  நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை  வெளியான தேர்தல் முடிவுகளில்,


திமுக ராணி ஸ்ரீகுமார் -  4,25,679 வாக்குகளும், 


அதிமுக கூட்டணி டாக்டர் கிருஷ்ணசாமி - 2,29,480 வாக்குகளும்,


பாஜக கூட்டணி ஜான் பாண்டியன் - 2,08,825 வாக்குகளும்,


நாம்தமிழர் கட்சி இசை மதிவாணன் - 1,30,335 வாக்குகளும் பெற்று 1,96,199 வாக்கு வித்தியாசத்தில் திமுகவை சேர்ந்த டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வெற்றி பெற்றுள்ளார். 


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராணி ஸ்ரீகுமார் கூறும் பொழுது, "திராவிட முன்னேற்ற கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களது திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதை கருதுகிறேன். முதல்வர் ஸ்டாலின்  பெண்கள் மற்றும் மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது  மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த வெற்றியை கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் பரிசாக சமர்ப்பிக்கிறோம். எனது வெற்றிக்காக உழைத்த கட்சியினர், தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை உரித்தாக்கி கொள்கிறேன். எனது தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர  என்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வேன்" என்றார். இரு பெரும் தலைவர்களை தோற்கடித்து இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்த்தீர்களா என்ற கேள்விக்கு, இதை மிகவும் சந்தோஷமாக பார்க்கிறேன் இந்த வெற்றியை மக்கள், முதல்வர் ஸ்டாலின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தந்த பரிசாகவே  நான் கருதுகிறேன் என்றார். 




தொகுதியின் நிலவரம்:


கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தென்காசி தொகுதியில் மொத்தமுள்ள 15, 25,439 வாக்குகளில் 10,58,987 வாக்குகள் பதிவாகின. இந்த முறையும் இங்கு திமுகவே களமிறங்கி உள்ளது. அரசு மருத்துவருமான ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிட்டார். சங்கரன்கோவிலை சேர்ந்த இவரது கணவர் ஸ்ரீகுமார், திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட்டார். அதே போல பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும், நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணன் என்பவரும் போட்டியிட்டனர். இவர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 15 பேர் களம் கண்டது குறிப்பிடத்தக்கது. 


இந்த தொகுதியை பொறுத்தவரை முக்கிய இரு பெரும் தலைவர்களான புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக ஜான்பாண்டியன் ஆகிய இருவரை பின்னுக்குத் தள்ளி அரசியலில் பெரிதும் வெளியே தெரியாத டாக்டர் ராணி ஸ்ரீகுமார்  திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பது பேசுப்பொருளாகியுள்ளது.