தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. அதன்படி கேரள மற்றும் பிற மாநிலங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பதிவாகி வருகிறது.


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி:


தெற்கு ஆந்திர -  வடதமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும்,  தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில், ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள்,   திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் நாளை நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் எப்படி?


சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 24  மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் வெப்பநிலை இயல்பை ஒட்டி தான் இருக்கிறது. நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது. நேற்று மாலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெரினா கடற்கரை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, கிண்டி, மடிப்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பதிவானது.