மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 


இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த 7 கட்டங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 19 ஆம் தேதியே தமிழ்நாட்டுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் இடையே 4 முனை போட்டியானது நிலவியது.


2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நிலவரத்தை விட 2024-ல் மாற்றம் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 


இதில் மதுரை தொகுதியில் தொடக்கம் முதலே ஆளும் எம்.பியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான சு.வெங்கடேசன் தொடர்ந்து முன்னிலை வகித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ளார். கிட்டதட்ட தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சரவணனை விட 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று சு.வெங்கடேசன் வெற்றி பெற்றார். 


யார் இந்த சு.வெங்கடேசன்? 


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சு.வெங்கடேசன். இவருக்கு கமலா எனும் மனைவியும், யாழினி, தமிழினி என்ற மகளும் உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த 34 ஆண்டுகளாக உறுப்பினராக சு.வெங்கடேசன் உள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், மாநில தலைவராகவும் பணியாற்றியவர். 2011 ஆம் ஆண்டு சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. 


அதுமட்டுமல்லாமல் கவிதை தொகுப்பு, வரலாற்று மற்றும் சமூகம் சார்ந்த 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல முக்கிய நிகழ்வுகளில் சு.வெங்கடேசன் பங்கு முக்கியமானது. குறிப்பாக கீழடி அகழாய்வு குறித்து மக்கள் அறிந்து கொள்ள பல நிகழ்வுகளை நடத்தினார். 


மேலும் தமிழகத்தை வஞ்சிப்பதாக மத்திய அரசை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவார். குறிப்பாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடங்காமல் இருப்பது பற்றி கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தார்.