சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கான வாக்குபதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோர் வீட்டிலிருந்து நடந்து வந்து வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது, "முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்" என்று கூறினார்.



இதேபோல், சேலம் மாநகர் ஐய்யன்திருமாளிகையில் உள்ள வாக்குச்சாவடியில் சேலம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். செரி ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதா பால மந்திர் பள்ளியில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்.செல்வகணபதி இவரது மனைவி பாப்பு உடன் வந்து வாக்களித்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் விக்னேஷ் சேலம் ஓமலூர் திண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அவரது மனைவி பிரியா, அவரது தந்தை பரமசிவம், தாய் தனப்பாக்கியம் ஆகியோருடன் வந்து வாக்களித்தார். நாம் தமிழர் கட்சியின் சேலம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் மனோஜ் குமார் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.