Highest FD Interest Rates Banks: மூத்த குடிமக்களுக்கான நிரந்தர வைப்புத் தொகை சேமிப்பு திட்டத்திற்கு, சில வங்கிகள் 9 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது.


மூத்த குடிமக்களுக்கான நிரந்தர சேமிப்புத் திட்டம்:


வயதான காலத்தில் முறையாக பணத்தை கையாளுதல் மற்றும் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது. அதன்படி பார்த்தால் மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத்தொகைகள் ஒரு விவேகமான நிதி விருப்பமாகும்.  காரணம் அவை நம்பகமான வருமானம் மற்றும் உறுதியான மூலதன பாதுகாப்பை வழங்குகின்றன. உங்களது பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதன் மூலம் நிதிப் பாதுகாப்பு, மருத்துவ செலவுகள், நிதி சுதந்திரம், பணவீக்கத்தை முறியடித்தல், வாங்கும் சக்தியைப் பராமரித்தல் மற்றும் நிலையான வருமானம் போன்ற பல நன்மைகளை அனுபவிக்கலாம். ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு இது மிகவும் சரியான தேர்வாகும். வங்கிகள் இப்போது மூத்த குடிமக்களுக்கு 9.5% வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இது பொது முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட அதிகமாகும். இந்த நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்கள் மூலம், மூத்த குடிமக்கள் முதலீடு செய்வதில் கூடுதல் ரிஸ்க் எடுக்காமல் விரைவாக தங்கள் நிதியை வளர்க்க முடியும்.


முதலீடு பலனளிக்கும் சில வழிகள்:


பல்வேறு விதமான கால அளவுகள் மற்றும் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களுடன் முதலீடு செய்வதன் மூலம், அனைத்து பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்வதால் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம். வித்தியாசமான நிரந்தர வைப்புத் தொகை திட்டங்கள், முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை கொடுக்கும். அசல் தொகை மற்றும் வட்டி வருவாயை மறு முதலீடு செய்வதன் மூலம், கூட்டு வட்டி அம்சத்தில் பெரிய வருவாயை ஈட்டலாம்.


மூத்த குடிமக்களுக்கு FD வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல்:



  • ஆக்சிஸ் வங்கி 17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான காலவரையறைக்கு 7.85 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓராண்டு சேமிப்பிற்கு 7.2 சதவிகிதமும், இரண்டு ஆண்டுகள் சேமிப்பிற்கு 7.6 சதவிகிதமும், மூன்று ஆண்டுகள் சேமிப்பிற்கு 7.75 சதவிகிதமும் வட்டி வழங்குகிறது.

  • HDFC வங்கி 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை 7.75 சதவ்கிதமும்,  18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு 7.1 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது. ஓராண்டு காலத்திற்கு 7.1 சதவிகிதமும் , இரண்டு ஆண்டு காலத்திற்கு 7.5 சதவிகிதமும் மற்றும் மூன்று ஆண்டு காலத்திற்கு 7.5 சதவ்கிதமும் வட்டி வழங்கப்படுகிறது.

  • ஐசிஐசிஐ வங்கி 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு 7.75 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. ஓராண்டு காலத்திற்கு 7.2 சதவிகிதமும், ஈராண்டு காலத்திற்கு 7.5 சதவிகிதமும் மற்றும் மூன்றாம் ஆண்டு சேமிப்பு காலத்திற்கு 7.5 சதவிகிதமும் வட்டி வழங்குகிறது.

  • எஸ்பிஎம் பேங்க் இந்தியா 3 ஆண்டுகள் மற்றும் 2 நாட்களை விட அதிகமாகவும்,  5 ஆண்டுகளுக்கும் குறைவாகவும் பின்பற்றப்படும் நிரந்தர சேமிப்பு திட்டங்களுக்கு 9 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. ஓராண்டு சேமிப்பு காலத்திற்கு 7.6 சதவிகிதமும், ஈராண்டு சேமிப்பு காலத்திற்கு 8.15 சதவிகிதமும் மற்றும் மூன்றாண்டு பதவிக்காலத்திற்கு 7.55 சதவிகிதமும் வட்டி வழங்குகிறது.

  • யெஸ் பேங்க் இந்தியா 18 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலவரையறைக்கு 8.2 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. ஓராண்டு சேமிப்பு காலத்திற்கு 7.75 சதவிகிதமும், ஈராண்டு சேமிப்பு காலத்திற்கு 8 சதவிகிதமும் மற்றும் மூன்றாண்டு காலத்திற்கு 8 சதவிகிதமும் வட்டியை வழங்குகிறது.